ஸ்கேன் எந்திரம் அருகே ஆக்ஸிஜன் சிலிண்டருடன் சென்ற வாலிபர் அதில் சிக்கி உயிரிழப்பு!

0
27

மும்பை லால்பாக் பகுதியை சேர்ந்த ராஜேஷ் மாருதி (வயது32) மும்பை நாயர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த உறவினர் லெட்சுமி பாயை பார்க்க நேற்று சென்று உள்ளார். ஆஸ்பத்திரி சென்ற நேரத்தில் ஆஸ்பத்திரியில் லெட்சுமி பாயிக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கவேண்டி இருந்தது. எனவே அவர் லெட்சுமி பாயிக்கு தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டரை எம்.ஆர்.ஐ. ஸ்கேன் அறைக்குள் எடுத்து சென்றுள்ளார். அப்போது அறையில் இருந்த எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எந்திரம் செயல்பாட்டில் இருந்துள்ளது.

ராஜேஷ் மாருதி ஆக்ஸிஜன் சிலிண்டருடன் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எந்திரம் அருகே சென்றுள்ளார். அவர் கையில் இரும்பு சிலிண்டரை வைத்திருந்ததால் எந்திரத்தில் உள்ள காந்ததன்மை அவரை இழுத்தது. இதனால் அவர் எந்திரத்திற்குள் சிக்கினார். அங்கு இருந்தவர்களால் ராஜேஷ் மாருதியை காப்பாற்ற எதுவும் செய்யமுடியவில்லை. எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எந்திரத்தில் சிக்கிய அவர் பரிதாபமாக உயிரிழந்தார். எம்.ஆர்.ஐ. ஸ்கேன் அறைக்குள் செல்வதற்கு முன்னதாக ஆக்ஸிஜன் சிலிண்டருடன் செல்லலாமா என வார்டு பாயிடம் கேட்டு உள்ளார். அவரும் நோயாளிக்கு உதவிகரமாக இருக்கும், மூச்சுவிட சிரமம் இருக்காது என கூறிஉள்ளார். இதனையடுத்தே அவர் உள்ளே சென்று உள்ளார் என தெரிகிறத்.

ராஜேஷ் மாருதி எந்திரத்திற்குள் சிக்கியதும் கதறி அழுது உள்ளார். அவருடைய சத்தம் கேட்டு வந்த மருத்துவமனை ஊழியர்கள் அவரை வெளியே இழுத்து உள்ளனர். அவரை அங்கிருந்து அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்று உள்ளனர், ஆனால் அவர் உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து அறிந்து ராஜேஷ் மாருதியின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரி வளாகத்தில் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ராஜேஷ் மாருதியின் மைத்துனரான ஹரிஷ் பேசுகையில், எனது தாயார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரை பார்க்க ராஜேஷ் மாருதி சென்று இருந்தார்.

அந்த நேரத்தில் எனது தாய்க்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கவேண்டி இருந்துள்ளது. எனவே அவருக்கு தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டரை எடுத்துவருமாறு ஆஸ்பத்திரி வார்டு பாய், ராஜேஷ் மாருதியிடம் கூறியுள்ளார். இதனால் தான் அவர் வெளியாட்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ள எம்.ஆர்.ஐ. ஸ்கேன் அறைக்குள் ஆக்ஸிஜன் சிலிண்டருடன் நுழைந்துள்ளார். இந்த சம்பவம் ஆஸ்பத்திரி டாக்டர்கள் மற்றும் நிர்வாகத்தின் கவனக்குறைவால் தான் நடந்துள்ளது. எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எந்திரம் அருகே ஆக்ஸிஜன் சிலிண்டரை எடுத்து செல்லக்கூடாது என்று அவரிடம் யாரும் சொல்லவில்லை என கூறிஉள்ளார்.

இதற்கிடையே மருத்துவமனை நிர்வாகம், மருத்துவமனை மீதான குற்றச்சாட்டை நிராகரித்து உள்ளது. ஆக்ஸிஜன் சிலிண்டரை எடுத்துச் செல்ல வேண்டாம் என அறிவுரை வழங்கப்பட்டது என கூறிஉள்ளது. இதுதொடர்பாக மருத்துவமனை மற்றும் வார்டு பாயை வேலையில் இருந்து சஸ்பெண்ட் செய்து உள்ளது. ஆஸ்பத்திரி டாக்டர் சவுரப், வார்டு பாய் வித்தல் சவான், ஆயா சுனிதா சுர்வே ஆகியோர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்து உள்ளது. அவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

‘‘வார்டு பாயும், ஆயாவும் நோயாளியுடன் இருந்துள்ளனர். எம்.ஆர்.ஐ. ஸ்கேன் அறைக்குள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. டாக்டர் அல்லது வார்டு பாய் உயிரிழந்தவரிடம் ஆக்ஸிஜன் சிலிண்டருடன் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எந்திரம் அருகே செல்லக்கூடாது என சொல்லியிருக்க வேண்டும்’’ என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எந்திரத்தில் சிக்கி பலியான வாலிபரின் குடும்பத்திற்கு முதல்– மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்து உள்ளார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: