விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி 6 பேர் படுகாயம்!

0
27

காரும், லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்ட விபத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியானார்கள். 6 பேர் படுகாயம் அடைந்தனர். கோவிலுக்கு சென்று விட்டு திரும்பியபோது இந்த பரிதாப சம்பவம் நடந்து விட்டது.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்தவர் ரத்தீஸ் (வயது 34). இவருடைய மனைவி வீணா (30). இவர்களுடைய மகன்கள் அபிஜேஸ் (7) மற்றும் தீரேஷ் (2). இவர் கோவை பீளமேடு டீச்சர்ஸ் காலனி எஸ்.டி.அவன்யூவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் சொந்தமாக கார் வைத்து கொண்டு, கோவை விமான நிலையம் பகுதியில் வாடகைக்கு ஓட்டி வந்தார்.

இந்த நிலையில் சொந்த ஊரில் நடைபெறும் கோவில் திருவிழாவுக்கு குடும்பத்துடன் செல்ல ரத்தீஸ் முடிவு செய்தார். அதன்படி ரத்தீஸ், அவருடைய மனைவி வீணா, மகன்கள் அபிஜேஸ், தீரேஷ் ஆகியோர் ஒரு காரில் நீடாமங்கலம் புறப்பட்டு சென்றனர். இவர்களுடன் ரத்தீசின் அண்ணன் ரூபேஸ் (35), இவருடைய மனைவி சுமதி (30), இவர்களுடைய மகள்கள் தீபசீதா (7), லட்சுமி(2) மற்றும் ரத்தீசின் தாயார் லலிதா (57) ஆகியோரும் சென்றனர்.

பின்னர் அங்கு சாமி தரிசனம் முடித்து விட்டு அனைவரும் அதே காரில் கோவைக்கு திரும்பினார்கள். காரை ரத்தீஸ் ஓட்டினார். டிரைவரின் இருக்கை அருகே லலிதா அமர்ந்து இருந்தார். பின் இருக்கையில் ரூபேஸ், சுமதி, தீபசீதா, லட்சுமி மற்றும் ரத்தீசின் மனைவி வீணா, இவர்களின் குழந்தைகள் அபிஜேஸ் மற்றும் தீரேஷ் ஆகியோர் அமர்ந்து இருந்தனர்.

இவர்களுடைய கார், திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலை கடந்து ஓலப்பாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே திருப்பூர் பெரியாண்டிபாளையத்தில் இருந்து பஞ்சுகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.

அப்போது கண் இமைக்கும் நேரத்தில் காரும் லாரியும், நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. அப்போது காருக்குள் இருந்தவர்கள் “காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்” என்று அபயக்குரல் எழுப்பினார்கள். இதற்கிடையில் விபத்தில் காரின், டீசல் டேங்க் உடைந்து, டீசல் சிதறியதால், லாரியில் இருந்த பஞ்சு குபீரென்று தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் வெள்ளகோவில் போலீசார், தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் பொதுமக்கள் விரைந்து சென்று காருக்குள் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது காரை ஓட்டிய ரத்தீஸ், முன் இருக்கையில் அமர்ந்து இருந்த லலிதா ஆகியோர் உடல் நசுங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர். மேலும் பின் இருக்கையில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ரூபேஸ், சுமதி, தீபசீதா, லட்சுமி, வீணா, அபிஜேஸ், தீரேஷ் ஆகியோரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரூபேஸ் பரிதாபமாக இறந்தார். மற்றவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக தீப்பிடித்து எரிந்த பஞ்சு லாரி மீது தண்ணீரை பீய்ச்சு அடித்து தீயணைப்பு படைவீரர்கள் அணைத்தனர். ஆனால் அதற்குள் லாரியில் இருந்த பஞ்சு அனைத்தும் எரிந்து நாசமானது.

லாரி தீப்பிடித்து எரியத்தொடங்கியதும், ஊத்துக்குளியை சேர்ந்த டிரைவர் சபாபதி (48) லாரியில் இருந்து குதித்து, ஓட்டம் பிடித்து வெள்ளகோவில் போலீசில் சரண் அடைந்தார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: