லாரி மரத்தில் மோதியதில் 7 பெண்கள் உள்பட 9 பேர் சாவு; 41 பேர் படுகாயம்.

0
70

லாரி மரத்தில் மோதியதில் 7 பெண்கள் உள்பட 9 பேர் சாவு; 41 பேர் படுகாயம்.

மண்டியா அருகே லாரி மரத்தில் மோதிய விபத்தில் 2 பெண்கள் உள்பட 9 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 41 பேர் படுகாயம் அடைந்தனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றவர்களுக்கு இந்த சோகம் நிகழ்ந்து உள்ளது.

லாரி மரத்தில் மோதியது
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா கெஸ்தூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தோரேசெட்டிஹள்ளி பகுதியில் நேற்று இரவு ஒரு லாரி சென்று கொண்டு இருந்தது. அந்த லாரியில் டிரைவர் உள்பட 51 பேர் பயணம் செய்தனர். அப்போது முன்னால் சென்று கொண்டு இருந்த வாகனத்தை, லாரி டிரைவர் முந்தி செல்ல முயன்றதாக தெரிகிறது.

அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய லாரி, சாலையோரமாக இருந்த மரத்தின் மீது பயங்கர வேகத்தில் மோதியது. இந்த விபத்தில் லாரியின் முன்பகுதியில் அமர்ந்து இருந்த 2 பெண்கள் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். பின்பகுதியில் இருந்த 48 பேர் படுகாயம் அடைந்தனர்.

9 பேர் சாவு
இந்த விபத்து பற்றி அறிந்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டு இருந்த 48 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் ஆஸ்பத்திரியில் 5 பெண்கள் உள்பட 7 பேர் இறந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 9– ஆக உயர்ந்தது. படுகாயத்துடன் 41 பேருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து நடந்ததும் டிரைவர், லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

விபத்து நடந்த பகுதி மண்டியா–மத்தூர் தேசிய நெடுஞ்சாலை என்பதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்து பற்றி அறிந்த கெத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்து பாதிப்பை சீர்செய்தனர். மேலும் விபத்தில் பலியான 2 பேரின் உடல்களையும், ஆஸ்பத்திரியில் இறந்த 7 பேரின் உடல்களையும் மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள…
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், விபத்தில் இறந்தவர்கள் யாதனஹள்ளி கிராமத்தை சேர்ந்த ஜெயம்மா(வயது 60), சன்னம்மா(48), பூஜா(16), பர்வதம்மா, பீரம்மா, போரம்மா, மாதம்மா, சிவண்ணா, மது என்பது தெரியவந்தது. ஆனால் படுகாயம் அடைந்த 41 பேரின் பெயர், விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.

இவர்கள் அனைவரும், மத்தூர் டவுனில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற போது லாரி விபத்தில் சிக்கியதும், அதில் 9 பேர் இறந்ததும் தெரியவந்தது.

மேலும் லாரியை டிரைவர் கவனக்குறைவாக ஓட்டியதால் விபத்து நடந்ததும் தெரிந்தது. இதுகுறித்து கெத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை வலைவீசி தேடிவருகிறார்கள்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்ற போது லாரி விபத்தில் சிக்கி 7 பெண்கள் உள்பட 9 பேர் பலியான சம்பவம் மண்டியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: