யாழில் அடித்துக் கொலை செய்யப்பட்ட பெண் விசாரணைகளில் வெளிவந்துள்ள புதிய தகவல்!

0
53

யாழ்ப்பாணம் – மானிப்பாய், ஆனைக்கோட்டை வீதியில் வயோதிபப் பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதும், கொலை நடைபெற்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட தடயப்பொருட்கள் தொடர்பிலும் பாரிய சந்தேகம் எழுந்துள்ளது.

திருட்டிற்காக இந்த கொலை சம்பவம் இடம் பெற்றிருக்கலாம் என்று ஆரம்பத்தில் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.

எனினும் இந்த கொலை நடைபெற்ற இடத்திற்கு அருகில் இருந்த மூதாட்டியின் கைப்பையில், 3 சங்கிலிகள், 2 காப்புகள், மற்றும் 40,500 ரூபாய் பணம் என்பன காணப்பட்டுள்ளன.

ஆனால் கொலையை செய்தவர்கள் மூதாட்டியின் கையில் இருந்த மோதிரத்தையும், காதில் இருந்த தோடு என்பவற்றை மட்டுமே எடுத்துச்சென்றுள்ளனர்.

பணத்திற்காகவே இந்த கொலை நடைபெற்றுள்ளது என்று வழக்கை திசை திருப்புவதற்காக இவர்கள் தோடு மற்றும் மோதிரத்தை எடுத்துச்சென்றிருக்கலாம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் தடயப்பொருட்களாக நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஐவரும் ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த 22 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – மானிப்பாய் ஆனைக்கோட்டை வீதியில் உறவினர் ஒருவரின் உதவியுடன் தனிமையில் வாழ்ந்து வந்த 72 வயதுடைய ஜெகநாதன் சத்தியபாமா என்ற மூதாட்டி அண்மையில் தலையில் அடிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இவரது பெறாமகன் கிளிநொச்சியில் வசித்து வருகின்றார். வழமையாக பெறாமகன் வந்து பார்வையிட்டு செல்வதுடன், இவருக்கான உணவுகளை வேறு நபர்களிடம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.

அதேநேரம் இந்த மூதாட்டிக்கு பாதுகாப்பாக அவரது மைத்துனர் ஒருவர் வழமையாக இரவில் தங்குவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த மூதாட்டி சடலாமாக மீட்கப்பட்ட நிலையில் இவர் என்ன காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார் என்பது தொடர்பில் பாரிய சந்தேகம் எழுந்துள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: