மும்பை ரெயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து! ரெயில் சேவை பாதிப்பு!

0
57

மும்பை ரெயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து! ரெயில் சேவை பாதிப்பு!

மும்பை பாந்திரா ரெயில் நிலையம் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றியபோது கியாஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 20–க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசமாகின. மேலும் ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டது.

கியாஸ் சிலிண்டர் வெடித்தது
மும்பை பாந்திரா ரெயில் நிலையத்தையொட்டி உள்ள பெகராம் பாடா என்ற பகுதியில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளது. இந்த குடிசை வீடுகளை அகற்ற சமீபத்தில் மாநகராட்சி உத்தரவிட்டு இருந்தது. இந்த உத்தரவை தொடர்ந்து பாந்திரா கிழக்கு பகுதியில் வசிக்கும் குடிசைவாசிகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் நேற்று மாநகராட்சி அதிகாரிகள் பெகராம் பாடா பகுதிக்கு வந்தனர். அவர்கள் சட்டவிரோத குடிசைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மாலை 4.30 மணி அளவில் அங்குள்ள குடிசை வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் திடீரென வெடித்து தீப்பற்றியது. இதனால் குடிசைகளில் தீ வேகமாக பரவியது.

டிக்கெட் கவுண்ட்டருக்கு பரவியது
மேலும் குடிசை வீடுகள் இருந்த பகுதியில் அமைந்து இருந்த பாந்திரா ரெயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டருக்கும் தீ பரவியது. இதையடுத்து அங்கு இருந்த ஊழியர்கள், பயணிகள் அப்புறப்படுத்தப்பட்டனர். இந்தநிலையில் தீ விபத்து நடந்த குடிசையில் இருந்த மேலும் சில கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறின. இதனால் தீ மளமளவென பரவியது. இதனால் அந்த பகுதியே புகை மண்டலமானது.

தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் 10 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 10 தண்ணீர் டேங்கர் வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.

சுமார் 3 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த பயங்கர தீ விபத்தில் 20–க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசமாகின.

ரெயில் சேவை பாதிப்பு
முன்னதாக தீ விபத்து ஏற்பட்டவுடன் குடிசை வீடுகளில் வசித்து வரும் மக்கள் தங்களது உடைமைகளை தூக்கிவந்து அருகில் உள்ள தண்டவாளத்தில் வைத்தனர். மேலும் வேடிக்கை பார்க்க ஏராளமான மக்களும் தண்டவாளத்தில் குவிந்தனர். இதனால் துறைமுக வழித்தடத்தில் பாந்திரா– சி.எஸ்.எம்.டி. இடையே சுமார் 20 நிமிடங்கள் ரெயில்சேவை பாதிக்கப்பட்டது.

இந்த தீ விபத்து குறித்து பாந்திரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: