மாடியில் இருந்து குதித்து என்ஜினீயரிங் கல்லூரி மாணவன் பலி!

0
39

மாடியில் இருந்து குதித்து என்ஜினீயரிங் கல்லூரி மாணவன் பலி!

தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-வது மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த நகரி பைபாஸ் சாலை காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடாபதி. விவசாயி. இவருடைய மகன் புருஷோத்தமன்(வயது 18). இவர், ஆவடி அருகே உள்ள வேல்டெக் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.

கல்லூரி விடுதியில் தங்கி இருந்து படித்து வந்தார். கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்ததால் நேற்று முன்தினம் புருஷோத்தமன், விடுதியில் இருந்து வீட்டுக்கு புறப்பட்டு சென்று விட்டதாக தெரிகிறது.

நேற்று காலை கல்லூரிக்கு வந்த மாணவர் புருஷோத்தமன், ‘எப்’ பிளாக் கட்டிடத்தில் உள்ள 2-வது மாடிக்கு சென்றார். திடீரென அவர் மாடியில் இருந்து கீழே குதித்து விட்டார். இதனை பார்த்த சக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தலை மற்றும் கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு தரையில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த அவரை மீட்டு கல்லூரி ஆம்புலன்ஸ் மூலம் சென்னை போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், மாணவர் புருஷோத்தமன் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து புருஷோத்தமனின் தந்தை வெங்கடாபதி அளித்த புகாரின்பேரில் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவர் புருஷோத்தமன் எதற்காக மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்? என விசாரித்து வருகின்றனர்.

மாணவர் புருஷோத்தமன் கல்லூரிக்கு கட்டணம் செலுத்தவில்லை என்றும், அடுத்த மாதம் 2-ந் தேதி பருவத்தேர்வு தொடங்க இருப்பதால், அதற்குள் கல்வி கட்டணத்தை செலுத்த வேண்டும். இல்லையென்றால் கடிதம் எழுதி கொடுத்து விட்டு செல்லும்படி அவரிடம் கல்லூரி நிர்வாகம் கூறியதாக தெரிகிறது.

எனவே கல்லூரி கட்டணம் செலுத்தாததால் விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா?, விடுமுறை என்பதால் கல்லூரி விடுதியில் இருந்து ஊருக்கு புறப்பட்டு சென்றதாக கூறப்படும் அவர், எதற்காக நேற்று கல்லூரிக்கு வந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: