மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தோழி இறந்த துக்கத்தால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை!

0
71

மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தோழி இறந்த துக்கத்தால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை!

திருநாவலூர் அருகே தோழி இறந்த துக்கத்தால் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் அருகே உள்ள செம்மனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவருடைய மகள் பிரசாந்தி (வயது 16). இவர் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். அப்போது அவருடன் அதேபள்ளியில் படித்து வந்த தோழியான ஆவலம் கிராமத்தை சேர்ந்த ரசிகா(16) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்து போனார். தோழி இறந்து விட்டாளே என்று கண்ணீர் வடித்த பிரசாந்திக்கு அவருடைய பெற்றோர் ஆறுதல் கூறி வந்தனர். இருப்பினும் பிரசாந்தி வீட்டில் யாரிடமும் சரியாக பேசாமலும், உணவு உட்கொள்ளாமலும் மன வேதனையுடன் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேல்முருகன் தனது மனைவி, மகளுடன் படுத்து தூங்கினார். மறுநாளான நேற்று அதிகாலை எழுந்த வேல்முருகன் அருகில் படுத்திருந்த மகளை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தபோது அருகில் உள்ள மாட்டுக்கொட்டகையில் பிரசாந்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்த வேல்முருகன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் கதறி அழுதனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருநாவலூர் போலீசார் பிராசாந்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தோழி இறந்த துக்கத்தில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அக்கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: