போலீசுக்கு தெரியாமல் மனைவியின் உடலை எரிக்க முயன்ற ரியல் எஸ்டேட் அதிபர்!

0
4672

போலீசுக்கு தெரியாமல் மனைவியின் உடலை எரிக்க முயன்ற ரியல் எஸ்டேட் அதிபர்!

திருச்சி:- அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள கண்டிராதித்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவருடைய மகன் கணபதி (வயது 34). ரியல் எஸ்டேட் அதிபரான இவருக்கும், அரியலூர் விளாங்காரத் தெருவை சேர்ந்த காமராஜ் என்பவரின் மூத்த மகளான பட்டதாரி ஜனனிக்கும்(28) கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்கள் திருச்சி தில்லைநகர் 11-வது குறுக்கு தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது தளத்தில் வசித்து வந்தனர்.

இந்த தம்பதிக்கு அக்‌ஷய் கவுதம்(3), ரிதன்யா(1½) என 2 குழந்தைகள் உள்ளனர். கணபதி அதே பகுதியில் ரியல் எஸ்டேட் அலுவலகம் வைத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜனனியை மயங்கிய நிலையில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு காரில் கணபதி கொண்டு சென்றார். வீட்டில் ஜனனி தூக்கில் தொங்கியதாகவும், அவருக்கு சிகிச்சை அளிக்குமாறும் டாக்டர்களிடம் அவர் கூறினார்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஜனனி ஏற்கனவே இறந்து விட்டதாகவும், பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறும் கணபதியிடம் கூறினார்கள்.

ஆனால் ஜனனியின் உடலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், கணபதி தனது காரில் சொந்த ஊரான கண்டிராதித்தத்துக்கு நள்ளிரவு கொண்டு சென்றார். அங்கு அவர் போலீசாருக்கு தெரியாமல் உடலை எரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டார். இதற்கிடையே தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் திருச்சி தில்லைநகர் போலீசாரை தொடர்புகொண்டு, ஜனனியின் உடலுடன் கணபதி வந்த விவரத்தை தெரிவித்தனர்.

மனைவியின் உடலை எரிக்க முயன்ற
மனைவியின் உடலை எரிக்க முயன்ற

உடனடியாக தில்லைநகர் போலீசார் விசாரணையை தொடங்கினார்கள். அப்போது தான் ஜனனியின் உடலை கணபதி தனது சொந்த ஊருக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து தில்லைநகர் போலீசார் கண்டிராதித்தத்துக்கு நள்ளிரவு சென்று, ஜனனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே போலீசார் வருவதை முன்கூட்டியே அறிந்த கணபதி அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.

இதுகுறித்து தகவலறிந்த ஜனனியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு நேற்று காலை வந்தனர். இது தொடர்பாக ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஜனனியின் தந்தை காமராஜ் புகார் அளித்தார்.

அதில், “தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், திருமணத்தின்போது ஜனனிக்கு 60 பவுன் நகையும், ரூ.5 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப்பொருட்களும் கொடுத்தேன். அதன்பிறகு சில மாதங்கள் தான் கணவருடன் ஜனனி சந்தோஷமாக குடும்பம் நடத்தினார். பின்னர் கணபதி மற்றும் அவருடைய பெற்றோர் மற்றும் சகோதரி, சகோதரியின் கணவர் ஆகியோர் எனது மகளிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு, அடித்து கொடுமைப்படுத்தி வந்தனர். கணவர் வீட்டில் தன்னை கொடுமைப்படுத்துவதாக ஜனனி என்னிடம் கூறிவந்தார். கூடுதல் வரதட்சணை கேட்டு கணபதி மற்றும் அவருடைய குடும்பத்தினர் தான் எனது மகளை கொலை செய்திருப்பார்கள். இதனை மறைக்க அவர்கள் ஜனனியின் உடலை போலீசுக்கு தெரியாமல் எரிக்க முயற்சி செய்திருக்கிறார்கள். எனவே இது தொடர்பாக கணபதி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் தலைமறைவான கணபதி சிக்கினார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜனனிக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் மட்டுமே ஆவதால், திருச்சி உதவி கலெக்டர் கமல்கிஷோரும் விசாரணை நடத்தி வருகிறார். ஜனனி எப்படி இறந்தார்? என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தான் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: