பிரபல பாடகி ஹர்ஷிதா தஹியா சுட்டுக்கொலை!!

0
56

பிரபல பாடகி ஹர்ஷிதா தஹியா சுட்டுக்கொலை!!

பிரபல ஹரியானா பாடகியான ஹர்ஷிதா தஹியா மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

நாட்டுப்புற பாடல்கள் பாடி புகழ்டைந்தவர் ஹர்ஷிதா தஹியா. 22 வயதாகும் இவர் அரியானாவில் கச்சேரி முடித்து காரில் வீடு திரும்பும் போது, மர்ம நபர்களால் நேற்று மாலை சுட்டுக் கொல்லப்பட்டார். பானிபட் நகரில் இசை கச்சேரி ஒன்றில் கலந்து கொண்ட ஹர்ஷிதா காரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது சாம்ரா என்ற கிராமத்தில் சென்று கொண்டிருந்த அவரின் காரை வழி மறித்த மர்ம நபர்கள் ஹர்ஷிதாவை சரமாரியாக சுட்டுள்ளனர். இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், ஹர்ஷிதா சென்று கொண்டிருந்த காரை, 2 மர்ம மனிதர்கள் வழி மறித்துள்ளனர் என்றும் பின்பு அவருடன் இருந்த கார் டிரைவர் மற்றும் பாடகர் ஒருவரை காரில் இருந்து வெளியேறும்படி கூறி விட்டு ஹர்ஷிதாவை மட்டும் சரமாரியாக சுட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர். அதே போல் அவரின் உடலில் 7- 8 துப்பாக்கி குண்டுகள் ஆழமாக பாய்ந்த பின்னரே ஹர்ஷிதா உயிரிழந்துள்ளதாகவும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
சமீபத்தில் ஹர்ஷிதா தனது வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளார். இதனால் அவருக்கு மர்ம நபர்களிடம் இருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது. இந்த அச்சுறுத்தலை பெரிதும் கண்டு கொள்ளாத அவர் நேற்று துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஹர்ஷிதாவின் அக்கா லதா தன் தங்கையின் மரணத்திற்கு திகார் ஜெயிலில் இருக்கும் தனது கணவர் தினேஷ்தான் காரணம் என்று கூறியுள்ளார். மேலும் அவர் கடந்த 2014 ஆம் ஆண்டு தனது தங்கையை கற்பழிக்க முயன்றதாகவும், தனது தாயை தினேஷ் கொன்றதற்கு ஹர்ஷிதாதான் நேரில் கண்ட சாட்சி என்றும் கூறியுள்ளார். இந்த காரணத்திற்காகத்தான் தினேஷ் கூலிப்படைகளை ஏவி தனது தங்கையை கொடூரமாக கொன்றுள்ளார் என்று லதா குற்றம் சாட்டியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: