பிணத்தை தோண்டி 50 கிராம் தங்கம் திருட்டு! நடந்த கேவலம்!

0
164

பிணத்தை தோண்டி 50 கிராம் தங்கம் திருட்டு! நடந்த கேவலம்!

கலபுரகி அருகே இறந்த மூதாட்டியின் உடலை தோண்டி எடுத்து 50 கிராம் தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மூதாட்டி சாவு

கலபுரகி மாவட்டம் ஆலந்தா தாலுகா கஜூரி கிராமத்தை சேர்ந்தவர் பிரேமா பாய் (வயது 75). கணவர், மகன், மகள் இல்லாததால் அவர் மட்டும் தனியாக வசித்து வந்தார். வயது முதிர்வு காரணமாக அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். அவரை, உறவினர்கள் கண்காணித்து வந்தனர். கடந்த 5 நாட்களுக்கு முன்பு அவர் உடல் நலக்குறைவு காரணமாக இறந்தார்.

இதையடுத்து, அவருடைய உடலை அந்த கிராமத்தில் புதைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த வேளையில், அவர் அணிந்திருந்த 50 கிராம் தங்க நகைகளை யார் பெற்று கொள்வது? என்பது தொடர்பாக உறவினர்கள் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால், அந்த கிராமத்தை சேர்ந்த தலைவர்கள், பிரேமா பாயை, அவர் அணிந்திருக்கும் தங்க நகைகளுடன் புதைத்தனர்.

உடலை தோண்டி எடுத்து திருட்டு

இந்த நிலையில், நேற்று காலையில் கஜூரி கிராமத்தில் பிரேமா பாய் புதைக்கப்பட்ட இடம் தோண்டப்பட்டு கிடந்தது. மேலும் அவருடைய உடல் வெளியே தெரிந்த நிலையில் இருந்தது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள், ஆலந்தா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது, பிரேமா பாயின் உடலில் கிடந்த 50 கிராம் தங்க நகைகள் திருட்டுப்போய் இருப்பதை கிராமத்தினர் பார்த்து போலீசாரிடம் தெரிவித்தனர். இதனால், பிரேமா பாய் புதைக்கப்பட்ட இடத்தை நேற்று முன்தினம் இரவு தோண்டிய மர்மநபர்கள், அவருடைய உடலில் கிடந்த 50 கிராம் தங்க நகைகளை திருடி சென்றிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர், அவருடைய உடல் அந்த இடத்திலேயே புதைக்கப்பட்டது.

வலைவீச்சு

இதுபற்றிய புகாரின் பேரில், ஆலந்தா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் நேற்று ஆலந்தா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: