பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டிய 9 பேர் கொண்ட‌ கும்பல் ரூ.36 கோடி செல்லாத நோட்டுகளுடன் கைது!

0
116

பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டிய 9 பேர் கொண்ட‌ கும்பல் ரூ.36 கோடி செல்லாத நோட்டுகளுடன் கைது!

புதுடெல்லி,

காஷ்மீரில் கடந்த ஆண்டு ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்க தளபதி பர்கான் வானி கொல்லப்பட்டதை தொடர்ந்து, பாதுகாப்பு படையினருக்கு எதிராக கலவரம் மூண்டது. கலவரத்தில் 90 பேர் பலியானார்கள்.

இதுபற்றிய விசாரணையின்போது, காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு பிரிவினைவாதிகள் உள்ளிட்டோர் நிதி திரட்டி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், டெல்லியில் ஒரு கும்பல் காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டும் வேலையில் ஈடுபட்டுள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்புக்கு துப்பு கிடைத்தது.

செல்லாத நோட்டுகள்

அவர்களது நடமாட்டத்தை கண்காணித்து வந்த தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள், டெல்லி கன்னாட்பிளேஸ் பகுதியில் அந்த கும்பலை சேர்ந்த 7 பேர், நிறைய பெட்டிகளை 4 கார்களில் ஏற்றிக் கொண்டிருந்ததை பார்த்தனர்.

அவர்களை பிடித்து பெட்டிகளை திறந்து பார்த்தபோது, உள்ளே பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் கட்டுக்கட்டுகளாக இருந்தன. செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட அந்த நோட்டுகளின் மதிப்பு ரூ.36 கோடியே 34 லட்சம் ஆகும்.

9 பேர் கைது

காஷ்மீர் பயங்கரவாதிகளுக்காக திரட்டப்பட்ட அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், 7 பேரையும் விசாரணைக்காக, தேசிய புலனாய்வு அமைப்பின் தலைமையகத்துக்கு கூட்டிச் சென்றனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில், மேலும் 2 பேர் பிடிபட்டனர்.

மொத்தம் 9 பேரையும் அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் இன்று தனி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.

கைதானவர்களில், டெல்லியை சேர்ந்த பிரதீப் சவுகான், பகவான் சிங், வினோத் ஸ்ரீதர் ஷெட்டி, மும்பையை சேர்ந்த தீபக் தொப்ரானி, அம்ரோகாவை சேர்ந்த எஜாஜுல் ஹாசன், நாக்பூரை சேர்ந்த ஜஸ்விந்தர் சிங், காஷ்மீரை சேர்ந்த உமர் முஷ்டாக் தர், ஷானவாஸ் மிர், மஜித் யூசுப் சோபி ஆகியோர் அடங்குவர்.

புதிய நோட்டுகளாக மாற்ற முயற்சி

பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய வேறு சில அமைப்புகளும், தனிநபர்களும் இன்னும் ஏராளமான செல்லாத நோட்டுகளை வைத்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இத்தகையோரில் ஒரு கும்பல், அந்த நோட்டுகளை செல்லக்கூடிய புதிய நோட்டுகளாக மாற்ற முயன்று வருவதாகவும் அவர்கள் கூறினர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: