நீங்கள் பிறந்த கிழமைகள் மூலம் உங்கள் குணநலன்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா?

0
328

நீங்கள் பிறந்த கிழமைகள் மூலம் உங்கள் குணநலன்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா?

உலகில் பிறந்த அனைவரும் ஏதேனும் ஒரு கிழமையில் தான் பிறந்திருக்க வேண்டும். கிழமைகளுக்கு ஏற்ப ஒவ்வொருவரின் குணமும் ஒவ்வொரு விதமாக இருக்கும். எந்தக் கிழமையில் பிறந்தவர்கள், எப்படிப்பட்ட குணநலன்களைப் பெற்றிருப்பார்கள் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

திங்கட்கிழமை :

இந்தக் கிழமையில் பிறந்தவர்கள், அறிவுப்பூர்வமாகச் சிந்தித்து செயல்படுபவர். பிறர் செய்ய முடியாத காரியங்களை, அலட்டிக்கொள்ளாமல் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டிருப்பார்கள். தீர யோசித்த பின்னரே செயல்களில் ஈடுபடுவர். நீதி, நேர்மையைக் கடைப்பிடிப்பவர்களாக இருப்பர். அதிகமாக செலவு செய்ய அஞ்சுவார்கள். கலைத்துறையில் ஈடுபாடு அதிகமாகவே இருக்கும். நேர்வழியில் சம்பாதிக்கும் எண்ணம் கொண்டவர்.

இந்தக் கிழமையில் பிறந்தவர்கள் திங்கள் தோறும் அம்பிகையை வழிபடுவதோடு, பவுர்ணமி விரதமிருந்தால் அதிக பலன்களைப் பெறலாம்.

செவ்வாய்க்கிழமை :

இந்தக் கிழமையில் பிறந்தவர்கள் வீரமும், விவேகமும் மிக்கவர்களாக இருப்பர். எந்த வேலையையும் அரைகுறையுடன் விட்டு விட, இவர்கள் மனம் சம்மதிக்காது. சேமிக்கும் இயல்பு இல்லாதவர்கள். கோபம் காரணமாக அல்லல்படுவார்கள். நமக்கும் ஓர் காலம் வரும் என்ற நம்பிக்கையும், உறுதியும் இவர்களுக்கு உண்டு. எதையும் எதிர்த்துப் போராடும் வலிமை பெற்றவர்கள். யாரிடம் யோசனைகளைக் கேட்டாலும் தான் எடுத்த முடிவையே கடைசியில் செயல்படுத்துவர்.

இந்தக் கிழமையில் பிறந்தவர்கள் சஷ்டி விரதமிருந்து சண்முகனை வழிபட்டால் சகல பாக்கியங்களையும் பெற முடியும்.

புதன்கிழமை :

இந்தக் கிழமையில் பிறந்தவர்கள் புத்திசாதுரியத்துடன் விளங்குவர். அடுத்தவர்களுக்கு யோசனை சொல்வதில் அசகாய சூரர்கள். அடிக்கடி திட்டங்களை மாற்றிக் கொண்டிருக்கும் பழக்கம் கொண்டவர்கள். புதுமையை விரும்பினாலும், பழமையை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இப்படித்தான் வாழவேண்டும் என்ற வரைமுறையை வகுத்து வாழ்பவர்கள். சங்கீதம் கலை, இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட இவர்கள், வரவறிந்து செலவு செய்வார்கள்.

இந்தக் கிழமையில் பிறந்தவர்கள் ஏகாதசி விரதமிருந்து விஷ்ணுவையும், லட்சுமியையும் வழிபடுவது நல்லது.

வியாழக்கிழமை :

இந்தக் கிழமையில் பிறந்தவர்கள் எதையும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வர். கோபப்படும் பொழுது இவர்களை சமாதானப்படுத்துவது சிரமம். கூர்மையான அறிவும், எதையும் எளிதில் புரிந்துகொள்ளும் ஆற்றலும் பெற்றவர்கள். தெய்வபக்தி மட்டுமல்லாமல், தேசபக்தியும் இவர்களிடம் அதிகம் உண்டு. அதனால் பொதுநலத்தில் புதிய பொறுப்புகள் தானாகவே வந்து சேரும். சான்றோர்கள், பெரியோர்களின் சொற்களை மதித்து நடப்பார்கள்.

இந்தக் கிழமையில் பிறந்தவர்கள் வியாழன்தோறும் விரதமிருந்து குரு தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் விருப்பங்கள் நிறைவேறும்.

வெள்ளிக்கிழமை :

இந்தக் கிழமையில் பிறந்தவர்கள் குறைவில்லாச் செல்வங்களைப் பெற்று வாழ்பவர்கள். கலை, இலக்கியம், சினிமா, நடனம் ஆகியவற்றில் ஆர்வம் இருக்கும். மற்றவர்களைக் கேலி பேசுவதில் அலாதி பிரியம் உண்டு. உடன் இருப்பவர்கள், இவர்களைக் கேட்டே முடிவெடுக்கும் படியான நிலைமையை உருவாக்குவர். சகல விஷயங்களும் தெரிந்திருந்தாலும், மற்றவர்கள் சொல்லும் பொழுது தெரியாததைப் போலவே கேட்பார்கள். முன் வைத்த காலைப் பின் வைக்க மாட்டார்கள்.

இந்தக் கிழமையில் பிறந்தவர்கள் வெள்ளிக்கிழமை தோறும் லட்சுமியை வழிபடுவதன் மூலம் செல்வநிலை உயரும்.

சனிக்கிழமை :

இந்தக் கிழமையில் பிறந்தவர்கள், எதற்காகவும் கலங்கமாட்டார்கள். பிறருக்கு கட்டளையிடும் சக்தியைப் பெற்றிருப்பர். மனதை அடக்கியாளும் தன்மை உண்டு. இவர்களுக்கு நீடித்த நட்பும் இல்லை; நீடித்த பகையும் இல்லை. புத்தகங்களைப் படிப்பதில் ஆர்வமும், சான்றோர்களிடம் ஆலோசனை கேட்டுச் செயல்படும் தன்மையும் பெற்றவர்கள். எதிர் காலத்திற்காக சேமித்துவைத்துக் கொள்ளப் பிரியப்பட மாட்டார்கள். இரக்கமற்றவர்களைப் போல தோற்றமளித்தாலும் இனியகுணம் கொண்டவர்கள்.

இந்தக் கிழமையில் பிறந்தவர்கள் சனிக்கிழமைதோறும் விரதமிருந்து விநாயகப் பெருமானையும், சனிபகவானையும், அனுமனையும் வழிபடுவது நல்லது.

ஞாயிற்றுக்கிழமை :

இந்தக் கிழமையில் பிறந்தவர்கள், எதிர்கால வரலாற்றில் இடம்பெற வேண்டும் என்று நினைப்பவர்கள். மற்றவர்களை சீர்தூக்கி எடைபோட்டுப் பார்ப்பதில் ஆற்றல் பெற்றவர்கள். ஒரு சிலர் அவசரக் காரர்களாகவும், காரியங்களை அரைகுறையாகச் செய்பவர்களாகவும் விளங்குவர். உல்லாசப் பயணத்தில் பிரியம் கொண்டவர்கள். பத்திரிகை, திரைப்படம், அரசியல் போன்றவற்றில் ஈடுபாடு கொண்டிருப்பார்கள்.

இந்தக் கிழமையில் பிறந்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை தோறும் விரதமிருந்து, சூரியனை வழிபட்டால் நல்ல வாழ்க்கை அமையும்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: