நான் உன் மகன் இல்லை, நீ எனக்கு தந்தை இல்லை, என கலைச்செல்வன் (தனுஸ்) சொல்லட்டும்.!

0
67

நான் உன் மகன் இல்லை, நீ எனக்கு தந்தை இல்லை, என கலைச்செல்வன் (தனுஸ்) சொல்லட்டும்.!

மதுரை: ”என்னை தந்தை இல்லை என, தனுஷ் மனதார சொல்லட்டும்; அத்துடன் நான் விலகிக் கொள்கிறேன்,” என, கதிரேசன், கண்ணீர் மல்க கூறினார்.
மதுரை மாவட்டம், மேலுாரை சேர்ந்தவர் கதிரேசன், 65. இவர், மேலுார் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல் செய்த மனுவில், ‘என் மகன் கலைச்செல்வன், பிளஸ் 1 படிக்கும் போது, காணாமல் போய் விட்டார்.
‘தேடிய போது, அவர் சினிமாவில், தனுஷாக நடித்து கொண்டிருந்தார். அவரை சந்திக்க, கஸ்துாரிராஜா உள்ளிட்டோர் விடவில்லை. கலைச்செல்வனிடம் இருந்து ஜீவனாம்சம் தர உத்தரவிட வேண்டும்’ என, கோரியிருந்தார்.
இவ்வழக்கை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில், தனுஷ் வழக்கு தொடர்ந்தார். விசாரணைக்கு பின், கதிரேசன் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலுார் நடுவர் நீதிமன்றமும் வழக்கை ரத்து செய்தது.

இந்நிலையில், மதுரை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலிடம் நேற்று கதிரசேன் புகார் அளித்தார். அதில், ‘கலைச்செல்வன் வழக்கு ஆவணங்களாக பிறப்பு சான்று, ஜாதி சான்று, ஆதார் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை தாக்கல் செய்தார்.
அவை அனைத்தும் போலி. அரசு முத்திரைகளும் போலி. அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆக., 5ல் மதுரை கே.புதுார் போலீசில் புகார் அளித்தேன். எனினும் வழக்குப்பதிவு செய்யவில்லை.
போலி ஆவணங்கள் தாக்கல் செய்த தனுஷ் மீது, வழக்குப்பதிவு செய்ய, புதுார் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

பின், கதிரேசன் கூறியதாவது:
மதுரை கிளையில், வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த கலைச்செல்வன், என் முகத்தை நேரடியாக பார்க்க முடியாமல் தலை குனிந்திருந்தார். ‘நான் உன் மகன் இல்லை. நீ எனக்கு தந்தை இல்லை. உனக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. வயதான காலத்தில் எனக்கு ஏன் தொல்லை தருகிறாய்’ என, என்னை பார்த்து, கலைச்செல்வன் நேரடியாக கேட்டால் போதும்.
நான், அத்துடன் நொடிப் பொழுதில் விலகி கொள்கிறேன். அவர், அப்படி கேட்க மாட்டார். அந்த தைரியம் அவருக்கில்லை. நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன்.
இவ்வாறு கண்ணீர் மல்க கூறினார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: