நர்சிங் மாணவி மரணம்! கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!

0
65

நர்சிங் மாணவி மரணம்! கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!

திருவள்ளூர் மாவட்டம் பஞ்செட்டி நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பொன்மொழி. இவருக்கும், ரஜினீஸ்வரிக்கும் (வயது 20) 2 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. ரஜினீஸ்வரி, பொன்னேரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2–ம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார்.

புழல் ஏரிக்கரையில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அந்த கல்லூரி மாணவிகள் பாடம் தொடர்பாக ஆய்வு செய்ய நேற்றுமுன்தினம் சென்றனர். அங்கிருந்த தொட்டியில் ஏறிய போது ரஜினீஸ்வரி மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த அவரை புழல் ரெட்டேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஜினீஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்து அவரது உடல் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ரஜினீஸ்வரியின் உடலை வீட்டுக்கு கொண்டு வரும் வழியில் சென்னை–கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பஞ்செட்டியில் கிராம மக்களும், உறவினர்களும் ஆம்புலன்ஸ் வாகனத்தில் அவரது உடலை வைத்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது கல்லூரி நிர்வாகம், மாணவிக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக இருந்ததாக கோ‌ஷமிட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு பொன்னேரி கோட்டாட்சியர் முத்துசாமி, கும்மிடிப்பூண்டி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜன் ஆகியோர் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கல்லூரி நிர்வாகம், மாணவியின் உறவினர்களிடம் நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்தது. உரிய இழப்பீடு தருவதாகவும் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. திடீர் சாலைமறியலால் சென்னை–கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: