தூங்கும்போது ஓடிய மின்விசிறியை மனைவி நிறுத்தியதால் ஆத்திரத்தில் கணவன் வீட்டிலிருந்து மாயம்!

0
68

தூங்கும்போது ஓடிய மின்விசிறியை மனைவி நிறுத்தியதால் ஆத்திரத்தில் கணவன் வீட்டிலிருந்து மாயம்!

வேலூர் மாவட்டம் பனப்பாக்கத்தை அடுத்த தென்னல் கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி (வயது 31). இவர், அரக்கோணத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ரோஜா (24). இவர்களுக்கு 3 வயதில் குகன் என்ற மகன் உண்டு.
கடந்த மாதம் 25-ந்தேதி இரவு தண்டபாணி, ரோஜா, குகன் ஆகியோர் வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். அப்போது ரோஜா எழுந்து மின்விசிறியை ஓட விடாமல் நிறுத்தி விட்டதாக தெரிகிறது. தூக்கக்கலக்கத்தில் இருந்து திடுக்கிட்டு எழுந்த தண்டபாணி மனைவியிடம் மின்விசிறியை ஏன் நிறுத்தினாய்? எனக் கேட்டுள்ளார்.

இதனால் கணவன், மனைவிக்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு தகராறில் முடிந்தது. மனைவியிடம் கோபித்துக்கொண்டு தண்டபாணி வீட்டை விட்டு வெளியே சென்றார். இதுவரை அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. அதிர்ச்சி அடைந்த மனைவி ரோஜா, தண்டபாணியின் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்துள்ளார். அவரை காணவில்லை. அவர், எங்கேயோ மாயமாகி விட்டார்.

இதுபற்றி ரோஜா நெமிலி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திடீரென மாயமான பெட்ரோல் பங்க் ஊழியர் தண்டபாணியை போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வருகின்றனர்.

வீடுகளில் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டால். கணவரிடம் கோபித்துக் கொண்டு மனைவி தன்னுடைய தாய் வீட்டுக்கோ அல்லது உறவினர்களின் வீட்டுக்கோ செல்வது வழக்கம். ஆனால், வீட்டில் தூங்கும்போது ஓடிய மின்விசிறியை நிறுத்தியதால், மனைவியிடம் கோபித்துக்கொண்டு திடீரென கணவர் மாயமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: