தாய் மற்றும் மகளை கட்டிப்போட்டு பட்டப்பகலில் கொள்ளை.

0
57

தாய் மற்றும் மகளை கட்டிப்போட்டு பட்டப்பகலில் கொள்ளை.

வாஷியில் பட்டப்பகலில் வீடு புகுந்து தாய், மகளை கட்டிப்போட்டு கொள்ளையர்கள் ரூ.2 கோடி மதிப்புள்ள பணம், நகையை கொள்ளையடித்து சென்ற துணிகர சம்பவம் நடந்துள்ளது.

பெண் கதவை தட்டினார்
நவிமும்பை, வாஷி செக்டார் 17 பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அருண் (வயது 50). இவர் துர்பேயில் உள்ள ஏ.பி.எம்.பி. மார்க்கெட்டில் இஞ்சி மொத்த வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன் தினம் அருண், மகனுடன் மார்க்கெட்டிற்கு சென்றுவிட்டார். வீட்டில் அவரது மனைவியும், 22 வயது மகளும் மட்டும் இருந்தனர்.

இந்தநிலையில் பகல் 12 மணியளவில் அருணின் வீட்டு கதவை பெண் ஒருவர் தட்டினார். அருணின் மகள் கதவை திறந்து பார்த்தார். அப்போது வெளியில் இருந்த பெண் அவர்களுக்கு அன்பளிப்பு கொடுக்க வந்திருப்பதாக கூறினார்.

துப்பாக்கி முனையில் கொள்ளை
இந்தநிலையில் திடீரென அந்த பெண்ணுடன் 5 ஆண்கள் வீட்டிற்குள் திபு திபுயென நுழைந்தனர். அவர்கள் துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி வீட்டில் இருந்த தாய், மகள் இருவரையும் கட்டிப்போட்டனர்.

பின்னர் அவர்கள் வீட்டின் பீரோவில் இருந்த ரூ.1 கோடியே 90 லட்சம் பணம் மற்றும் 10 பவுன் தங்க நகை மற்றும் பொருட்களை எடுத்துக்கொண்டு, தாய், மகளை வீட்டிற்கு உள்ளேயே வைத்து பூட்விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

கொள்ளையர்களுக்கு வலைவீச்சு
இதற்கிடையே கொள்ளை சம்பவத்தில் அதிர்ச்சியில் உறைந்து இருந்த தாயும், மகளும் உதவி கேட்டு அலறினர்.

அவர்கள் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கதவை திறந்து உள்ளே சென்று அவர்களின் கட்டுகளை அவிழ்த்துவிட்டனர். பின்னர் இதுகுறித்து வாஷி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான கொள்ளையர்களின் உருவத்தை வைத்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் கொள்ளையர்கள் வீடு புகுந்து ரூ.2 கோடி பணம், தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் வாஷி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: