தனியார் நிறுவனத்திற்குள் புகுந்து மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன்!

0
52

தனியார் நிறுவனத்திற்குள் புகுந்து மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன்!
புதுக்கோட்டை அருகே இன்று காலை மனைவியை அவர் வேலைபார்த்த நிறுவனத்திற்குள் புகுந்து அரிவாளால் வாலிபர் ஒருவர் வெட்டினார்.

புதுக்கோட்டை அருகே இன்று தனியார் நிறுவனத்திற்குள் புகுந்து மனைவியை வாலிபர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 27). இவரது மனைவி சரண்யா (25). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. சரண்யா புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கட்டுமாவடி முக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆடிட்டர் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக சரண்யா, அறந்தாங்கியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு குழந்தையுடன் சென்று விட்டார். அங்கிருந்து வேலைக்கு சென்று வந்தார்.

இன்று காலை அவர் அலுவலகத்திற்கு சென்றதும், அங்கிருந்த பொருட்களை எடுத்து வைத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு உதயகுமார் அரிவாளுடன் வந்தார். அவரை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த சரண்யா அங்கிருந்து தப்பிக்க முயன்றார். இருப்பினும் உதயகுமார் ஆத்திரத்தில் சரண்யாவை மடக்கி பிடித்து அரிவாளால் சரமாரி வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார் .

இதில் சரண்யாவின் தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் வெட்டு விழுந்தது. காலை நேரத்தில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது-. இதையடுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்த சரண்யாவை அப்பகுதி பொது மக்கள் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அறந்தாங்கி போலீசார் உதயகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்பம் நடத்த வராத ஆத்திரத்தில் உதயகுமார், சரண்யாவை வெட்டினாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார்
விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: