செல்பி எடுக்க முயற்சித்த 2 இளைஞர்கள் பாறையில் இருந்து விழுந்து மரணம்!

0
50

செல்பி எடுக்க முயற்சித்த 2 இளைஞர்கள் பாறையில் இருந்து விழுந்து மரணம்!

மலகாலமுரு அருகே ‘செல்பி‘ எடுக்க முயன்றபோது பாறையில் இருந்து தவறி விழுந்து 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.

‘செல்பி‘ எடுக்க முயன்ற போது…

சித்ரதுர்கா மாவட்டம் மலகாலமுரு தாலுகா ராமமுரா கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 20). இவர் நேற்று முன்தினம் மேகலகனிவே கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால், பாறையில் உருவாகி உள்ள நீர்வீழ்ச்சியை காண நண்பர்களான சாமி, சிவப்பா ஆகியோருடன் சென்றார்.

அங்கு அவர்கள் 3 பேரும் பாறையின் மீது ஏறி நின்று செல்போனில் ‘செல்பி‘ எடுக்க முயன்றதாக தெரிகிறது. இந்த சந்தர்ப்பத்தில் கால்தவறி பாறையில் இருந்து வெங்கடேஷ், சாமி, சிவப்பா ஆகிய 3 பேரும் தவறி விழுந்தனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த வெங்கடேசும், சாமியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். சிவப்பா படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டு இருந்தார்.

சோகம்

இதுகுறித்து அறிந்த மலகாலமுரு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து போன 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய சிவப்பாவையும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மலகாலமுரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ‘செல்பி‘ எடுக்க முயன்ற போது பாறையில் இருந்து தவறி விழுந்து 2 வாலிபர்கள் பலியான சம்பவம் மேகலகனிவே கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: