சென்னை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் தூக்கில் பிணமாக தொங்கினார்! தற்கொலையா? கொலையா?

0
35

சென்னை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் தூக்கில் பிணமாக தொங்கினார்! தற்கொலையா? கொலையா?

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் கொப்பூர் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் உமாபதி(வயது 55). இவர், சென்னை காசிமேட்டில் போக்குவரத்து பிரிவில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டராக இருந்து வந்தார்.

இவருக்கு பிரேமா(50) என்ற மனைவியும், ஜெயக்குமார்(25), தனுஷ் என்ற தனுஷ்குமார்(23) என 2 மகன்களும் உள்ளனர். இவர்களில் ஜெயக்குமார், திருவள்ளூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். தனுஷ்குமார் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட உமாபதி, மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2–ந் தேதி வீட்டை விட்டு வெளியில் சென்ற அவர், அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

இதனால் பதறிப்போன அவரது குடும்பத்தினர் நண்பர்கள், உறவினர்கள் வீடுகள் என பல இடங்களில் தேடியும் உமாபதி கிடைக்கவில்லை.

இந்தநிலையில் நேற்று முன்தினம் கொப்பூர் பகுதியில் உள்ள மாந்தோப்பில் உமாபதி, தூக்கில் பிணமாக தொங்கினார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், அவருடைய மனைவி பிரேமா மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று உமாபதியின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இது குறித்து மணவாளநகர் போலீசில் பிரேமா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உமாபதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர் உடல்நிலை சரி இல்லாத காரணத்தால் மாந்தோப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: