சென்னையில் வழக்கு விசாரணைக்காக கோர்ட்டுக்கு வந்த ரவுடி பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

0
135

சென்னையில் வழக்கு விசாரணைக்காக கோர்ட்டுக்கு வந்த ரவுடி பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சென்னை புதுவண்ணாரப்பேட்டை பல்லவன் நகரைச் சேர்ந்தவர் ஜானகிராமன். இவருடைய மகன் விஜி என்ற விஜயகுமார் (வயது 24). ரவுடியான இவர் மீது காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸ் நிலையத்தில் அடிதடி மற்றும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் நேற்று மதியம் விஜயகுமார், ஒரு வழக்கு விசாரணைக்காக சென்னை பாரிமுனையில் உள்ள ஜார்ஜ் டவுன் கோர்ட்டுக்கு வந்தார். விசாரணை முடிந்து அவர் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.

மண்ணடி தம்பு செட்டி தெருவில் அவர் சென்ற போது, 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வழிமறித்தது. திடீரென அவர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் விஜயகுமாரை வெட்டியது.

அவர்களிடம் இருந்து தப்பிக்க விஜயகுமார் அங்கிருந்து ஓட முயன்றார். ஆனால் அந்த கும்பல் அவரை விடாமல் ஓட, ஓட விரட்டிச்சென்று வெட்டியது. உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக அங்கிருந்த வீட்டுக்குள் விஜயகுமார் புகுந்தார். ஆனால் அந்த கும்பலும் வீட்டுக்குள் சென்று விஜயகுமாரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றது.

இதில் பலத்த காயம் அடைந்த விஜயகுமார், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அவரை மர்ம கும்பல் ஓட, ஓட விரட்டி சென்றதை பார்த்த அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓடினர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த முத்தியால்பேட்டை போலீசார், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த விஜயகுமாரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்தும் பலன் இன்றி விஜயகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் கொலையாளிகள் விஜயகுமாரை ஓட, ஓட விரட்டி செல்வதும், அங்குள்ள வீட்டுக்குள் விஜயகுமார் புகுந்ததும், மர்ம கும்பலும் உள்ளே புகுந்து வெட்டி விட்டு திரும்பிச்செல்லும் காட்சிகளும் அதில் பதிவாகி இருந்தது.

சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த வீடியோ காட்சியில் பதிவான கொலையாளிகளை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். மேலும் முன்விரோத தகராறில் விஜயகுமாரை கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.

சென்னை பாரிமுனையில் பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: