சிறுவன் பிரதியுமன் கொலை வழக்கு! அதிரடி திருப்பங்கள்!

0
85

சிறுவன் பிரதியுமன் கொலை வழக்கு! அதிரடி திருப்பங்கள்!

புதுடெல்லி:- டெல்லி அருகே குர்கானில் உள்ள ரியான் சர்வதேச பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்த பிரதியுமன் (வயது 7) என்ற சிறுவன் கடந்த செப்டம்பர் 8-ந்தேதி பள்ளி கழிவறையில் கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக கிடந்தான். இது தொடர்பாக அந்த பள்ளியின் பேருந்து நடத்துனர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். சிறுவனை அந்த நடத்துனர் செக்ஸ் தொந்தரவுக்கு உட்படுத்தி கொன்றதாக கூறப்பட்டது.

ஆனால் இந்த விவகாரத்தில் அதிரடி திருப்பமாக, அந்த பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவன் ஒருவனை நேற்று செவ்வாய்க்கிழமை இரவில் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் கூட்டத்தை நடத்தவும், தேர்வு ஒன்றை ஒத்திவைக்கும் நோக்கிலும் இந்த கொலையை அந்த மாணவன் செய்ததாக கண்டறியப்பட்டு உள்ளது. 16 வயதான அந்த மாணவனிடம் இருந்து, கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.பள்ளியில் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மற்றும் தடயவியல், அறிவியல் பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொண்டதாக கூறிய அதிகாரிகள், அந்த மாணவனின் பெற்றோரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்திருப்பதாக தெரிவித்தனர். கொலை செய்ததை சிறுவனும் ஒப்புக்கொண்டதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் குர்கான் போலீசார், முதலில் பள்ளியின் பேருந்து நடத்துநரை முதல் குற்றவாளியாக சேர்த்து கைது செய்தது தற்போது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த நிலையில், பேருந்து நடத்துநர் அசோக்குமாரின் குடும்பத்தினர் குர்கான் போலீசாருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய முடிவு செய்துள்ளனர். இது குறித்து அசோக் குமாரின் தந்தை கூறுகையில், சிறுவன் கொலை வழக்கில் எனது மகன் பலிகடா ஆக்கப்பட்டு இருக்கிறார். குர்கான் போலீஸின் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு எதிராக வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம். கிராம மக்களின் நிதி உதவியோடு வழக்கு தொடரப்படும் என்றார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: