காதல் தகராறில் கல்லூரி மாணவரை அடித்து கொலை செய்து உடலை தண்டவாளத்தில் வீசிய‌ நண்பர்கள்!

0
105

காதல் தகராறில் கல்லூரி மாணவரை அடித்து கொலை செய்து உடலை தண்டவாளத்தில் வீசிய‌ நண்பர்கள்!

கரூர் அருகே புலியூரில் தனியார் சிமெண்டு ஆலை உள்ளது. இந்த ஆலைக்கு திண்டுக்கல் மாவட்டம் கரிக்காலியில் இருந்து சரக்குகள் ஏற்றி வர ரெயில்வே தண்டவாள பாதை தனியாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில்வே பாதையில் மணவாடி ஊராட்சி கத்தாழப்பட்டி அருகே நேற்று காலை தண்டவாளத்தில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதனை கண்ட அப்பகுதியினர் இதுகுறித்து வெள்ளியணை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தண்டவாளத்தில் பிணமாக கிடந்த வாலிபரின் உடலில் காயங்கள் இருந்தன. அவரது ஆடைகள் கலைந்திருந்தது. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பிணமாக கிடந்த வாலிபரை கொலை செய்து விட்டு தண்டவாளத்தில் உடலை மர்ம நபர்கள் வீசிச்சென்றது தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட வாலிபர் குறித்து அக்கம்பக்கத்தில் உள்ளவர் களிடம் போலீசார் விசாரித்த போது, அவரது அடையாளம் உடனடியாக தெரியவில்லை.

சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்ப நாய் ‘ஸ்டெபி’ கொண்டு வரப்பட்டது. மோப்ப நாய் வாலிபரின் உடலை மோப்பம் பிடித்து பின்னர் சிறிது தூரம் ஓடி சென்று நின்றுவிட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதையடுத்து வாலிபரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையான வாலிபரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் இறங்கினர். அப்போது வக்கீல் ஒருவர் மூலம் போலீசாருக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் ஒருவரது செல்போன் எண்ணை வைத்து போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவரது பெயர் அருண்(20) என்பதும், அவர் கரூர் மாவட்டம் துளசிகொடும்பை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

மேலும் அவரும், அவரது நண்பர்களும் சேர்ந்து கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், தண்டவாளத்தில் பிணமாக கிடந்தவர் கரூர் அருகே உள்ள ஜெகதாபியை அடுத்த குப்பகவுண்டனூரை சேர்ந்த முத்துசாமியின் மகன் கார்த்திக் (20) எனவும், மேலும் அவர் கரூர் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் பி.பி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது.

அருணிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதன் மூலம் குப்பகவுண்டனூர் பக்கத்து ஊரான கிருஷ்ணாகவுண்டனூரை சேர்ந்த மாரிமுத்துவின் மகன்கள் ராமராஜ்(23), தர்மராஜ்(21) ஆகியோர் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். இதில் தர்மராஜ் மட்டும் போலீசாரிடம் சிக்கினார். ராமராஜ் தலைமறைவாகி விட்டார். போலீசாரிடம் சிக்கிய தர்மராஜ், கொலையான கார்த்திக்கின் நெருங்கிய நண்பரும், அதே கல்லூரியில் பி.எஸ்சி. விலங்கியல் 3-ம் ஆண்டு படித்து வருவதும் தெரிந்தது.

போலீஸ் விசாரணையில் தர்மராஜ் கூறிய தகவல்கள் வருமாறு:-
நானும்(தர்மராஜ்), கார்த்திக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு பஸ்சில் சென்று வந்தோம். அப்போது பஸ்சில் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணிடன் எங்களுக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் தனது செல்போன் எண்ணை எங்கள் 2 பேரிடமும் கொடுத்தார். நாங்கள் 2 பேரும் அவரிடம் அடிக்கடி பேசி வந்தோம்.

இந்த நிலையில் கார்த்திக் அந்த இளம்பெண்ணை காதலிப்பதாக என்னிடம் கூறினான். நானும் சரி என்று கூறிவிட்டேன். ஆனால் அந்த இளம்பெண்ணிடம் கார்த்திக் தனது காதலை செல்போன் வாயிலாக தெரிவிக்க தயங்கி வந்தான். இதனால் என்னிடம் தான் காதலிப்பதை அந்த இளம்பெண்ணிடம் எடுத்துக்கூற கூறினான்.

அப்போது நான் செல்போனில் இளம் பெண்ணிடம் கார்த்திக், உங்களை காதலிப்பதாக கூறினேன். ஆனால் அதற்கு இளம்பெண் கார்த்திக்கை தான் காதலிக்கவில்லை என்றாள். மேலும் என்னை காதலிப்பதாகவும், என்னை அவளுக்கு பிடித்திருப்பதாகவும் கூறினார். இதனால் நான் அவளை காதலிக்க தொடங்கினேன்.

எங்களது காதல் விவகாரம் கார்த்திக்கு தெரியாமல் இருந்தது. கார்த்திக்கை காதலிக்க மறுத்ததை அவனிடம் நான் சொல்லவில்லை. இந்த நிலையில் எங்களது காதல் கார்த்திக்கு தெரியவந்தது. இதனால் என்னிடம் கார்த்திக் என் மீது கோபப்பட்டான். நான் காதலிப்பதை கண்டு ஆத்திரமடைந்தான். கடந்த சில நாட்களுக்கு முன்பு கார்த்திக் மற்றும் அவனது நண்பர்கள் சிலர் எனது வீட்டிற்கு வந்து என்னை தாக்கிவிட்டு சென்றனர்.

இதனை நான் எனது அண்ணன் ராமராஜிடம் கூறினேன். அவர் நேற்று முன்தினம் இரவு கார்த்திக்கை நண்பர் அருண் மூலம் அழைத்து கொண்டு ஊரில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு கார்த்திக்கை அடித்து கொலை செய்துள்ளனர். பிறகு எனது அண்ணன் செல்போன் மூலம் என்னை அழைத்து சம்பவ இடத்திற்கு வரச்சொன்னார். நான் அங்கு சென்றேன்.

நாங்கள் 3 பேரும் சேர்ந்து கார்த்திக்கின் உடலை இரு சக்கர வாகனத்தில் வைத்து எடுத்து சென்றோம். சற்று தொலைவில் உள்ள ரெயில்வே தண்டவாள பாதையில் அவனது உடலை வைத்தோம். அந்த உடலில் ரெயில் ஏறி சென்றால் விபத்தில் இறந்தது போல தெரிந்துவிடும் என எண்ணி தண்டவாளத்தில் உடலை குறுக்காக வைத்தோம். ஆனால் அந்த பாதையில் ரெயில் எதுவும் வராததால் உடல் அப்படியே கிடந்துள்ளது. இதனை பொதுமக்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு தர்மராஜ் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதைதொடர்ந்து தர்மராஜ், அருண் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான ராமராஜை தேடி வந்தனர். அவர் திருப்பூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவரை தேடி போலீசார் திருப்பூர் சென்றனர். அங்கு ராமராஜை மாலையில் கைது செய்தனர். கைதான ராமராஜ், கார்த்திக்குடன் நட்புடன் பழகி இருந்துள்ளார். இந்த கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். காதல் தகராறில் கல்லூரி மாணவர் ஒருவர் நண்பர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் கரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: