கண்ணாடிக்குள் இருந்து ஒரு யுவதியின் அழுகுரல்!கொழும்பில் பதறவைக்கும் உண்மைச் சம்பவம்!

0
457

கண்ணாடிக்குள் இருந்து ஒரு யுவதியின் அழுகுரல் : கொழும்பில் மசாஜ் நிலையமொன்றில் நடந்த பதறவைக்கும் உண்மைச் சம்பவம்

கொழும்பு பொரளைப் பகுதியில் இன்று காலை பெண் ஒருவர் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது, கண்ணாடி அறைக்குள் இருந்து இளம் யுவதி ஒருவர் தன்னைக் காப்பாற்றுமாறு அபாயக் குரல் எழுப்பியதாகவும் பின்னர் குறித்தப் பெண்ணை காப்பாற்றச் சென்ற போது அங்கு நடந்த சம்பவத்தை விவரித்தும் தனது பேஸ்புக் பக்கத்தில் பெண் ஒருவர் பதிவேற்றியுள்ளார்.

குறித்த சம்பவமானது வாசிப்பவர்களை பதற வைக்கின்றது.
சமூக ஆர்வலரான குறித்த பெண், தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றிய பதிவு எவ்வித மாற்றமும் இல்லாமல் பின்வருமாறு,

‘இன்று காலை 7.30 மணி. பத்ரியைப் பள்ளியில் விட்டபின்பு பொரளை குறுக்கு வீதி வழியாக பொரளை பிரதான பாதையை நோக்கி வந்து கொண்டிருந்தேன். தினமும் போன்றே இன்றும் வாகன நெரிசல். சிக்னலில் நிற்கவேண்டியும் இருந்தது. அப்படி நின்று கொண்டிருக்கும் போது இடது பக்கம் தற்செயலாகப் பார்வை திரும்பியபோது, கண்ணாடி ஜன்னல் ஒன்றைத் தட்டியபடி கூப்பாடு போட்டுக் கொண்டிருந்த ஒரு பெண்ணைப் பார்த்தேன்.
கண்ணாடியைத் தாண்டி அவளது குரலைச் செவிமெடுக்க முடியவில்லை. அவள் ஆபத்தான சூழலில் இருக்கிறாள் என்பதற்கான அத்தனை முகபாவத்தையும் கண்டவுடன் பதட்டத்துடனே சில நொடிகள் அவளை உற்று நோக்கினேன். அதற்குள் கிரீன் சிக்னல் விழவே வாகனங்கள் ஊர்ந்து நகரத் தொடங்கின. வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி அவளை நோக்கிச் சென்றேன்.
அதுவோர் மசாஜ் சென்டர். மூன்று நான்கு கார்கள் நிறுத்தத்தக்க பார்க்கின் வசதியோடு கண்ணாடி இழைகளில் ஒட்டப்பட்ட ரம்மியமான படங்கள் சூழ இருந்தது. இருதட்டு அடக்கமான கட்டடம்.
18 – 20 வயது மதிக்கத்த மெலிந்த அந்தச் சிறுமி ஃ பெண் சிங்கள மொழியில் கூறியது இதுதான். ”என்னை இங்கே அடைத்து வைத்துள்ளார்கள். இங்கிருந்து எப்படியாவது நான் செல்ல வேண்டும். உதவுங்கள்” கிட்டே சென்றதும் அவளது குரல் கண்ணாடி ஜன்னல் வழியாக தூரத்தில் போல ஆனால் தெளிவாகக் கேட்டது.
”நீ இங்கே எப்படி எப்போது வந்தாய்” என்றேன்.
”நேற்று இரவு” என்று சொல்லிவிட்டு அழுதாள். மேற்கொண்டு எதுவும் கூறவில்லை.
இந்தச் சொற்களைக் கேட்டதும் எனக்கு நடுக்கம் உண்டாகியது. அங்கிருந்து அவளை மீட்பதற்கான வழிகள் இருக்கின்றதா என்று சுற்று முற்றும் பார்த்தேன். வெளியே பூட்டுப் போடப்பட்ட ஒரு கதவும் உள்ளே தாழிடப்பட்ட மற்றுமொரு கதவும் இருந்தன. உள்ளே தாழிடப்பட்ட கதவைத் தட்டிப் பார்த்தேன். எந்த அசைவும் இல்லை.
வேறு மார்க்கமில்லை. உடனே துரித பொலிஸ் சேவை 119 எண்களுக்குத் தொலைபேசினேன். என்னை அங்கேயே இருக்கும்படி கேட்கப்பட்டேன். 15 நிமிடங்களின் பின்பே பொலிஸ் அந்த இடத்தை வந்தடைந்தது.

இதற்குள்ளாக கண்ணாடி ஜன்னல் வழியாகத் தெரிந்து கொண்டிருந்தவள் திடீரென்று காணாமலாகிவிட்டிருந்தாள். எனக்கு ஒரே பதட்டமாக இருந்தது.
இந்த இடத்திற்கு எதிரே பிரபல சலூனாக அறியப்படுகின்ற ரமணி சலூன் அதன் வலது இடது பக்கங்களில் சில அலுவலகங்கள் உள்ளன.
அங்கெல்லாம் பணியாற்றுகின்றவர்கள் பணிக்கு வந்து கொண்டிருந்தார்கள். சிலர் அங்கே நின்று கொண்டிருந்த என்னிடம் விபரம் கேட்டார்கள்.
எப்படியோ அங்கே பொலிஸ் வந்து சேர்ந்தது. இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களில் ஒருவர் பின்பக்கமாகச் செல்வதற்கு வழிகள் உண்டா என்பதை ஆராய்ந்து கொண்டிருந்த போது மற்றையவர் கதவைத் தட்டினார். கதவு திறக்கப்பட்டது. ஆனால் பொலிஸைக் கண்டவுடன் கதவு அடித்துச் சாத்தப்பட்டது. கதவைத் திறந்தவர் நடுத்தர வயதுப் பெண்.
”காப்பாற்றுமாரு கத்தியவள் இவரா” என்று பொலிஸார் கேட்டனர்.
”இல்லை. இவர் வேறு. காப்பாற்றும்படி கத்தியவள் முதல் தளத்தில் இருந்துதான் கத்தினாள். சிறுமி போன்று இருந்த அவள் சிவப்பு நிறத்தில் உடை அணிந்திருந்தாள்.” என்றேன்.
பொலிஸ் கன்ட்ரோல் ரூமுக்குத் தகவல் சொல்லியது. 10 நிமிடங்களில் இரண்டு பெண் பொலிஸார் வந்தனர். கதவைத் திறக்கும்படி கத்தினர். தட்டினர். உதைத்தனர். கதவு அசையவே இல்லை. அந்த இடத்தில் இப்போது மெல்லக் கூட்டம் சேரத் தொடங்கியது. பொலிஸ் மீண்டும் கன்ட்ரோல் ரூமைத் தொடர்பு கொண்டு கதவை உடைப்பதற்கு அனுமதி கேட்டது.

இந்த நிலவரத்தைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு மேலும் பதட்டமாக ”நான் இங்கிருந்து செல்லலாம்தானே” என்று பொலிஸாரைக் கேட்டேன். அவர்கள் கண்டது, நடந்தவை அத்தனையையும் எழுதித் தரும்படி கேட்டனர். அவர்களது முறைப்பாட்டுப் புத்தகத்தில் அனைத்தையும் எழுதி, முகவரி, தெலைபேசி எண் உட்பட கையெழுத்திட்டுக் கொடுத்துவிட்டு அங்கிருந்து வீடு வந்தேன்.
சற்று முன்பு பொரளைப் பொலிஸிலிருந்து அழைப்பு வந்தது. ”உள்ளே யாருமே இல்லை, பின் கதவு வழியாகத் தப்பித்துச் சென்றுவிட்டார்கள்” என்கிறார்கள்.
எனது கவலை எல்லாம் காப்பாற்றச் சொல்லிக் கத்திய அந்த சிறுமிஃ பெண்ணைப் பற்றியது.
அதன் உரிமையாளரைப் பொலிஸார் பிடித்துள்ளனர். அங்கே பணியாற்றுகின்ற பெண்கள் சிலர் தங்கியிருந்ததாக அவர் கூறியுள்ளார்.
அப்படித் தங்கி இருந்த பெண்கள் அனைவரையும் இன்று 4 மணிக்குள் அடையாளம் காண்பித்து, அவர்களைப் பொலிஸிற்குக் கொண்டுவர உதவ வேண்டும் என்று பொலிஸ் அவரைப் பணித்துள்ளது.
இப்படி எல்லோரும் அழைத்து வரப்பட்ட பின்பு, ”காப்பாற்றும்படி” கத்திய அந்தப் பெண் அவர்களுள் இருக்கிறாளா என்று அடையாளம் காண்பிக்க பொலிஸ் நிலையம் வரும்படி என்னை அழைத்துள்ளனர்.

அவளைக் காப்பாற்ற முடியாது போன குற்ற உணர்வு வதைக்க, நடுங்கும் விரல்களால் இந்த வரிகளைத் தட்டச்சுகிறேன்.
எத்தனையோ பாலியல் வன்முறைகள், கொடுமைகள் பற்றிக் கேள்வியுறுகிறோம், பேசுகிறோம், குரல் தருகிறோம், கண்ணெதிரில் கதறிய ஒரு பெண்ணைக் காப்பாற்ற முடியாது போய்விட்டது.
அந்த இடத்தில் வேறு சில பெண்களும் இருந்திருக்க வேண்டும். தங்களைக் காட்டிக் கொடுத்துவிட்டதற்காக அவர்களே கூட இவளைச் சித்திரவதை செய்திருக்கலாம்.
மசாஜ் சென்டர்கள் வழியாகப் பெரும்பாலும் பாலியல் தொழில்கள்தான் நடக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. இதற்கு பொலிஸ் உயர் அதிகாரிகளும் உடந்தை.
இப்படியான சந்தர்ப்பங்களில் தெரிந்தோ, தெரியாமலோ அகப்படுகின்ற பெண்களைக் காப்பாற்றுவதற்கான பொறிமுறைகள் ஒன்றுமே இல்லை என்பது எத்துனை துயரம்.”
என பதிவேற்றியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: