கணவனுக்கும் மாமியாருக்கும் பச்சை காய் கறிகளை உண்ணக்கொடுத்து மருமகள் அட்டகாசம்! கணவர் கோட்டில் வழக்கு!

0
75

கணவனுக்கும் மாமியாருக்கும் பச்சை காய் கறிகளை உண்ணக்கொடுத்து மருமகள் அட்டகாசம்! கணவர் கோட்டில் வழக்கு!

பெங்களூருவில் வசித்து வருபவர் 28 வயது கம்ப்யூட்டர் என்ஜினீயர். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர் தனது தாயுடன் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் செய்து வைக்க அவருடைய தாய் விரும்பினார். ஆந்திராவை சேர்ந்த இளம்பெண்ணை தனது மகனுக்கு திருமணம் செய்ய அவர் முடிவு செய்தார். தனக்கு வரும் வருங்கால மனைவியை கம்ப்யூட்டர் என்ஜினீயர் பார்த்தார்.
அப்போது, அவர் உடல் பருமனுடன் குண்டாக காணப்பட்டுள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் தனக்கு இந்த பெண்ணுடன் திருமணம் வேண்டாம் என்று தாயிடம் கூறியுள்ளார். ஆனால், அதற்கு அவருடைய தாய் ஒப்புக்கொள்ளவில்லை. மேலும் மகனுக்கு அவர் வலுக்கட்டாயமாக அந்த இளம்பெண்ணுடன் திருமணம் செய்து வைத்தார். இந்த திருமணம் கடந்த செப்டம்பர் மாதம் நடந்தது.

திருமணம் முடிவடைந்த மறுநாளே தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்று புதுப்பெண் தனது கணவரிடம் கூறியுள்ளார். ஆனால், தனது தாயை பிரிந்து வர முடியாது என்று அவர் பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக, கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், உடல் பருமனை குறைக்கும்படி தனது மனைவியிடம் அவர் கூறியுள்ளார். இதனால், தனது கணவர் மீது இளம்பெண்ணுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், திடீரென்று வீட்டில் சமையல் செய்வதை நிறுத்திய இளம்பெண், தான் உணவு கட்டுப்பாடு மூலம் உடல் பருமனை குறைப்பதாக கூறியுள்ளார். அவர், சமைக்காத பச்சை காய்கறிகளை மட்டுமே சாப்பிட்டு வந்துள்ளார். அத்துடன், தனது கணவர் மற்றும் மாமியாரையும் பச்சை காய்கறிகளை உண்ண வைத்து தொந்தரவு செய்து வந்துள்ளார். உணவு வேண்டும் என்றால் தனியாக சமைத்து சாப்பிடும்படியும் அவர் கூறியுள்ளார். இதுதவிர, பச்சை காய்கறிகள் சாப்பிட மறுத்த தனது மாமியாரையும், கணவர் இல்லாத நேரத்தில் இளம்பெண் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, அவர்கள் 2 பேரும் பிரிந்து வாழ தொடங்கினர். அதாவது, இளம்பெண் தனது தாயின் வீட்டுக்கு சென்றார். கம்ப்யூட்டர் என்ஜினீயர் தனது தாயுடன் பெங்களூருவில் வசித்து வந்தார். இந்நிலையில், தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்கும்படி கம்ப்யூட்டர் என்ஜினீயர் பெங்களூரு குடும்ப நல கோர்ட்டை அணுகினார். இந்த சம்பவங்கள் அனைத்தும் திருமணம் ஆன ஒரு மாதத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை குடும்ப நல கோர்ட்டு விசாரித்து வந்தது.

இந்த விசாரணையின்போது, கணவன்–மனைவி இருவரும் கோர்ட்டில் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து உரைத்தனர். ஒரு கட்டத்தில், ‘தான் விருப்பப்பட்டு திருமணம் செய்யவில்லை. உறவினர்களின் வற்புறுத்தலால் தான் திருமணம் செய்தேன். தற்போது மனைவி எனக்கும், எனது தாயுக்கும் பல்வேறு வகையில் தொடர் தொல்லை கொடுப்பதால் அவரிடம் இருந்து விவாகரத்து அளிக்க வேண்டும்‘ என்று கம்ப்யூட்டர் என்ஜினீயர் கூறினார்.

இதற்கு, ‘என்னிடம் சேர்ந்து வாழ அவருக்கு பிடிக்கவில்லை. எனவே, நானும் அவரை பிரிந்து கொள்ள ஒப்புக்கொள்கிறேன்‘ என்று கம்ப்யூட்டர் என்ஜினீயரின் மனைவி கூறியுள்ளார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட கோர்ட்டு இந்து திருமண சட்டப்பிரிவு 12 (1) (சி)–ன்படி மனைவியிடம் இருந்து கம்ப்யூட்டர் என்ஜினீயருக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: