ஓட ஓட ரவுடி வெட்டிக் கொலை! இதனால் மக்கள் பதற்றத்தில் உள்ளனர்.

0
149

ஓட ஓட ரவுடி வெட்டிக் கொலை! இதனால் மக்கள் பதற்றத்தில் உள்ளனர்.

புதுச்சேரி முதலியார்பேட்டை உடையார் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சின்ன செல்வம் (வயது32). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். உடையார் தோட்டம் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் சில பிரச்சினைகள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த பணிகளை சின்ன செல்வம் கவனித்து வந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று மாலை கோவில் பகுதியில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிள்களில் திடீரென்று வந்த ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் சின்ன செல்வத்தை சுற்றி வளைத்தது. இதனை சற்றும் எதிர்பாராத அவர், அந்த கும்பலிடம் இருந்து தப்பி ஓடினார். ஆனால் அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் அவரை ஓடஓட விரட்டி மடக்கி சரமாரியாக வெட்டினார்கள்.

இதில் உடல் முழுவதும் வெட்டுக்காயமடைந்த சின்ன செல்வம் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். பின்னர் அந்த கும்பல் மோட்டார் சைக்கிள்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டது.

இதுபற்றி தெரியவந்ததும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த சின்ன செல்வத்தை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். பின்னர் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ்ரஞ்சன், போலீஸ் சூப்பிரண்டு அப்துல் ரகீம் மற்றும் முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்–இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.

கொலை செய்யப்பட்ட சின்ன செல்வம் ரவுடியாக சுற்றித் திரிந்து உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சீர்காழியில் பா.ம.க. பிரமுகர் மூர்த்தி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கு, புதுவையில் 2 கொலை முயற்சி வழக்குகள், அடிதடி வழக்கு உள்பட போலீசில் அவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

எனவே பழைய பகை காரணமாக பழி வாங்கும் நடவடிக்கையாக சின்ன செல்வம் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரை கொலை செய்து விட்டு தப்பிய ஓடிய கும்பலைச் சேர்ந்தவர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தீபாவளி அன்று (18–ந்தேதி) மேட்டுப்பாளையத்தில் ரவுடிகள் நாய் சேகர், ஜெரால்டு, சதீஷ் ஆகிய 3 பேர் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டனர். ரவுடிகளான இவர்கள் பழிக்குப்பழியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. ஆனால் இதுவரை இந்த வழக்கில் குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த கொலை சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது மீண்டும் ஒரு ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: