ஐதராபாத்தில் நடிகை ரோஜா வீட்டில் ரூ.10 லட்சம் நகைகள் திருட்டு

0
61

ஐதராபாத்தில் நடிகை ரோஜா வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

பிரபல நடிகை ரோஜா ஆந்திர மாநிலம் நகரி தொகுதியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வாக உள்ளார். இவருக்கு ஐதராபாத் தில் உள்ள மணிகொண்டா பகுதியில் சொந்தமாக வீடு உள்ளது.

இந்த வீட்டில் அவர் தனது கணவரும், பிரபல இயக்குனருமான செல்வமணி, மகள் அன்ஷா மாலிகா, மகன் கிருஷ்ணா கவுசிக் ஆகியோருடன் வசித்து வருகிறார்.

பொங்கல் விடுமுறையையொட்டி ரோஜா தனது குடும்பத்தோடு சென்னை வந்தார்.

அவர்கள் கடந்த 10 நாட்களாக வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் தங்கி இருந்தனர். இதனால் ஐதராபாத்தில் உள்ள வீடு பூட்டப்பட்டு இருந்தது.

பொங்கல் விடுமுறை முடிந்ததை தொடர்ந்து, ரோஜா தனது குடும்பத்தோடு நேற்று காலை விமானம் மூலம் சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு சென்றார்.

அவர்கள் ஐதராபாத் விமான நிலையத்தில் இருந்து மணிகொண்டா பகுதியில் உள்ள வீட்டுக்கு சென்றனர்.

அவர்கள் பூட்டியிருந்த வீட்டை திறந்து உள்ளே சென்றனர். அப்போது வீட்டினுள் உள்ள பீரோ மற்றும் நகைகள் வைக்கக்கூடிய ‘லாக்கர்’ ஆகியவை திறந்து கிடந்தன.

அவற்றில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, நகைகள் திருடுபோனது குறித்து, ரோஜா மாதாபூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டின் பூட்டு உடைக்கப்படாத நிலையில் வீட்டினுள் இருந்த நகைகள் திருடு போயிருப்பதால், வீட்டில் வேலை பார்த்த நபர்கள் தான் கைவரிசையை காட்டியிருப்பார்கள் என ரோஜா சந்தேகிக்கிறார்.

இதனை ரோஜா போலீசாரிடம் தெரிவித்தார். எனவே போலீசார் அந்த கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: