உஷார், உஷார். ஆண் பெண் இருவரும் குடும்பத்தில் அக்கறையாக இருங்கள்.

0
129

உஷார், உஷார். ஆண் பெண் இருவரும் குடும்பத்தில் அக்கறையாக இருங்கள்.

அவளுக்கு 35 வயது. கணவருக்கு அவளைவிட பத்து வயது அதிகம். அவர்களது ஒரே மகன் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான். அவர் சொந்தமாக சரக்கு ஏற்றும் நான்கு சக்கர வாகனம் ஒன்றை வைத்திருந்தார். அவரே அதை இயக்கிக் கொண்டிருந்ததால், குடும்பத்தை நடத்தும் அளவுக்கு வருமானம் வந்து கொண்டிருந்தது. அவர் எப்போதாவது மது அருந்தும் பழக்கம் கொண்டவர்.

அவர்களது பக்கத்து வீட்டில் அந்த இளைஞன் குடியேறுவதற்கு முன்பு வரை அவர்கள் வாழ்க்கை அமைதியாக இருந்தது. அவன் குடியேறிய நாளில் இருந்து நடப்பதை எல்லாம் மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் மிரண்டு போய், தூக்கத்தையும் இழந்து துக்கத்தில் துடித்துக் கொண்டிருக்கிறாள் அந்த 35 வயது பெண்.

அந்த இளைஞனுக்கு 25 வயதுதான். திருமணமாகாதவன். தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிகிறான். எப்போதும் சிரித்த முகத்தோடு வலம் வரும் அவன், முதலில் அந்த பெண்ணின் மகனுக்கு தூண்டில் போட்டிருக்கிறான். தனது வீட்டிற்கு அழைத்து கம்ப்யூட்டர், லேப்டாப் போன்றவைகளை எல்லாம் துழாவ அனுமதித்த அவன், அந்த சிறுவன் விளையாடுவதற்காகவே பழைய லேப்டாப் ஒன்றையும் கொடுத்துவிட்டான். வெளியே உள்ள உணவகங்களில் இருந்து விதவிதமான மேற்கத்திய உணவுகளை வாங்கிவந்து அந்த சிறுவனுக்கு வழங்கினான். பள்ளிக்கு செல்லும் அவனுக்கு அவ்வப்போது ‘பாக்கெட் மணி’யும் அள்ளிவிட்டான். தனது பெற்றோர் தராததை எல்லாம் பக்கத்து வீட்டு ‘அங்கிள்’ தருகிறார் என்று அவன் ஆனந்தப்பட்டு, எந்நேரமும் அந்த இளைஞனின் வீடே கதி என்று ஆனான். தாய் தட்டிக்கேட்டால் அவளை திட்டிக்கொண்டு, அந்த இளைஞனிடம் போய் முறையிட்டான்.

சிறுவனை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த அவன் அடுத்து, அவளது கணவருக்கு வலை விரித்துள்ளான். அவரை அவ்வப்போது தனது வீட்டிற்கு அழைத்து விலை உயர்ந்த மதுவை வழங்கி, அவர் தினமும் இரவில் வந்து ‘தம்பி இன்னைக்கு என்ன விசேஷம்?’ என்று கேட்டு, நான்கு ‘பெக்’ அடித்துவிட்டு செல்லும் நிலையை சீக்கிரமே உருவாக்கிவிட்டான். அதோடுவிடாமல், ‘ஒரே வண்டியைவைத்து உங்களால் எப்படி முன்னேறமுடியும். நான் லோனுக்கு ஏற்பாடு செய்கிறேன். இன்னொரு வண்டி வாங்கிக்கொள்ளுங்கள்’ என்று ஆசைகாட்டினான்.

‘புதிதாக இன்னொரு வண்டி வாங்கினால் அதை ஓட்டுறதுக்கு வேறொரு டிரைவரை போடணும். அவனையும் நீங்களே கண்காணிக்கணும். அது ரொம்ப கஷ்டமுங்க. அதனால் இருக்கிற வண்டியே போதும்..’ என்று மனைவி, கணவனிடம் மறுத்து சொல்லிப் பார்த்தாள். ஆனால் அவள் பேச்சு எடுபடவில்லை. அவர் இரண்டு வாகனங்களுக்கு முதலாளியானார்.

அதுவரை தானுண்டு தன் வேலை உண்டு என்று இருந்தவரை அந்த இளைஞன் தன் நண்பர்கள் குழுவோடு சேர்த்துக்கொண்டு, அடிக்கடி சுற்றுலா அழைத்துச் செல்ல ஆரம்பித்தான். அந்த இளைஞர் குழுவிடம் சிக்கிக்கொண்ட அவரது ‘லைப் ஸ்டைலே’ மாறிப்போனது.

கணவரும், மகனும் அந்த இளைஞனின் வலைக்குள் சிக்கிக்கொண்டு அவன் புகழையே பாடிக்கொண்டிருக்க, அடுத்து ஏதோ ஒரு அசம்பாவிதம் ஏற்படப்போகிறது என்று அவள் உள்ளுணர்வு சொன்னது.

அதுபோல், அன்று கணவர் இல்லாத நேரம் பார்த்து விலை உயர்ந்த செல்போனுடன் அவன் வீட்டிற்குள் நுழைந்தான். அதை வாங்கிக் கொள்ளுமாறு அவளை வற்புறுத்தினான். அவள் மறுத்தபோது, ‘உங்க அழகில் மயங்கி உங்களை அடைவதற்காகத்தான் நான் ஸ்கெட்ச் போட்டு வேலை பார்த்திட்டிருக்கேன். உங்க பையனுக்கும், கணவருக்கும் கண்டபடி செலவு செய்கிறேன். இரண்டு பேரும் என் வலையில் விழுந்தாச்சு. இனி நீங்க மட்டும்தான். நீங்களாக என் ஆசைக்கு இடங்கொடுக்காவிட்டால், உங்க குடும்பத்தில் எப்படிப்பட்ட குழப்பத்தையும் என்னால் உருவாக்க முடியும்’ என்றவன், பதிலுக்கு காத்திருக்காமல் அந்த செல்போனை அங்கேயேவைத்துவிட்டு திரும்பிப் போயிருக்கிறான்.

வேண்டா வெறுப்பாக அதை எடுத்துப்பார்த்தவளுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. அவளது குளியல் காட்சி ஒரு வீடியோவில் இடம் பெற்றிருந்தது. பக்கத்து வீடு என்பதால் அவளுக்கு தெரியாமல் அதை எப்படியோ படமாக்கியிருக்கிறான்.

அந்த இளைஞனை பற்றி மேலும் விசாரித்தபோது அவள் உள்ளபடியே நடுங்கிவிட்டாள். இப்படி அவனிடம் சிக்கும் பெண்களை, அவனது குழுவுக்கே பயன்படுத்திக்கொள்வானாம். தன்னைவிட பத்து வயது அதிகமுள்ள அழகான குடும்ப பெண்களை குறிவைப்பதே அவனது வேலையாம்!

பெண்களே, இப்படியும் ஒரு கோஷ்டி அலையுது பார்த்துக்குங்க..!!

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: