உணவு விடுதி உரிமையாளரின் ஈவிரக்கமற்ற செயல்!!இவர்களை என்னதான் செய்ய முடியும்!

0
192

காலி பேரூந்து நிலையத்திற்கு அருகில் ஒரு மணி நேரத்திற்குள் 4 முறை வலிப்பு ஏற்பட்டதனால் நடுவீதியில் வீழ்ந்த இளைஞன், தற்பொழுது கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
பதுளை மகியங்கனை வீதியில் வசிக்கும் குறித்த இளைஞன் தொழில் தேடி கொழும்புக்குச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் புறக்கோட்டையிலுள்ள உணவு விடுதியொன்றின் சமயலறையில் வேலைக்கு அமர்த்தப்பட்டார்.
குறித்த இளைஞன் வேலைக்கு அமர்த்தப்பட்டு ஒரு வாரம் கடந்த பின்னர் பாத்திரங்கள் கழுவிக்கொண்டிருந்த நிலையில் வலிப்பு ஏற்பட்டதனால், அவர் கழுவிக் கொண்டிருந்த இரு சாப்பாட்டுத் தட்டுக்கள் கீழே விழுந்துள்ளன.
இதனையடுத்து குறித்த உணவு விடுதியின் உரிமையாளர், ஒரு வார காலமாக வேலை செய்ததற்கான சம்பளம் எதுவும் கொடுக்காமல் குறித்த இளைஞனை பணியில் இருந்து உடனடியாக விரட்டியுள்ளார்.

குறித்த இளைஞனின் நிலைமையை நேரில் பார்த்துக்கொண்டிருந்த அப்பிள் வியாபாரி ஒருவர், காலியில் வசிக்கும் அவரின் நண்பரின் தொலைபேசி இலக்கத்தையும் பெற்றுக்கொண்டு, காலிக்குச் செல்வதற்காக பேரூந்து டிக்கட்டை எடுத்து வழியனுப்பியுள்ளார்.
இந்த நிலையில் காலியில் பேரூந்தில் இருந்து இறங்கிய குறித்த இளைஞன் பாதசாரிகள் கடவையைக் கடக்க முற்பட்ட போது, இடைவழியில் வலிப்பு ஏற்பட்டதனால் வீதியிலே வீழ்ந்துள்ளார்.
இவ்விடத்திற்கு சென்ற முச்சக்கரவண்டி சாரதியொருவர் பாதையோரத்திற்கு குறித்த இளைஞனை தூக்கிச் சென்று கையில் இரும்புத்துண்டொன்றைக் கொடுத்துள்ளார்.
இதனை அவதானித்த கருணை உள்ளங்கொண்ட நபரொருவர், உணவகம் ஒன்றிற்குக் கூட்டிச்சென்று உணவு வாங்கிக் கொடுத்த பின்னர் காலி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
காலி பொலிஸ் தலைமைப் பொறுப்பதிகாரி அஜித் குமார உடனடியாக குறித்த இளைஞனை அம்புலன்ஸ் வண்டியை வரவழைத்து காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில், அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதுகுறித்து குறித்த இளைஞன் தெரிவிக்கையில், எனது பெயர் சக்தி, என் அப்பா இறந்துள்ளார். அம்மா பக்கவாத நோயினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளார். எனது தம்பியும் என்னையும் அம்மா தான் பார்த்து வந்தார். குடும்ப வறுமை காரணமாக நான் கொழும்புக்கு தொழில் தேடி வந்தேன் என்றும் கூறியுள்ளார்.
தற்பொழுது இந்த இளைஞன் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: