இறுதி மூச்சு வரை வலிகளை சுமந்து போராடிய தாய் மரணம். யார் என்று தெரிகிறதா?

0
112

இறுதி மூச்சு வரை வலிகளை சுமந்து போராடிய தாய் மரணம். யார் என்று தெரிகிறதா?

இலங்கையில் காணாமல் போனோருக்காக குரல் கொடுத்த தாய் மரணம்.

வலிகளை சுமந்து போராடிய தாய்
வலிகளை சுமந்து போராடிய தாய்

காணாமல்போன தனது கணவரான அமலன் லியோன் மற்றும் மகனான றொசான் லியோன் ஆகியோரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் மிகத் தீவிரமாக முயற்சித்த மன்னாரைச் சேர்ந்த 58 வயதான ஜசிந்தா பீரிஸ் சில நாட்களுக்கு முன்னர் மாரடைப்பால் மரணமாகியுள்ளார்.

காணாமல் போன தனது கணவன் மற்றும் மகன் தொடர்பான வழக்கொன்றில் கலந்து கொள்வதற்காக கடந்த வாரம் ஜசிந்தா கொழும்பிற்குச் சென்றிருந்தார்.

கடற்படையினரின் இரகசிய முகாம் என நம்பப்படும் முகாமொன்றில் சில அடையாள அட்டைகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் இந்த அட்டைகளில் ஜசிந்தாவின் மகனான றொசான் லியோனின் அடையாள அட்டையும் கண்டெடுக்கப்பட்டது.

கொழும்பின் புறநகர்ப் பகுதிகளில் இடம்பெற்ற கடத்தல்களுடன் தொடர்புபட்டவர் என சந்தேகிக்கப்படுபவரான சிறிலங்கா கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கே.பி.தசநாயக்கவிடம் விசாரணைகளை மேற்கொண்டு வரும் விசாரணையாளர்களே இரகசிய முகாமில் சில அடையாள அட்டைகளைக் கைப்பற்றியிருந்தனர்.

இது தொடர்பான வழக்கு தற்போது கொழும்பில் இடம்பெற்று வரும் நிலையில் இந்த வழக்கு விசாரணையில் கலந்து கொள்வதற்காகவே ஜசிந்தாவும் கொழும்பு சென்றிருந்தார்.

உள்நாட்டுப் போர் இடம்பெற்ற வேளையில் பலவந்தமாகக் காணாமலாக்கப்பட்டவர்களின் இரத்த உறவுகள் மற்றும் அன்பிற்குரிய உறவுகளைத் தேடிக் கொண்டிருக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பல நூறு வரையானவர்களில் ஜசிந்தாவும் ஒருவராவார்.

காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை தெரியப்படுத்த வேண்டும் எனவும் தமக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் தவிர்ப்புப் போராட்டங்களை காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

காணாமல் போன தனது மகன் மற்றும் கணவன் தொடர்பான நீதிமன்ற வழக்கில் கலந்து கொள்வதற்காக கடந்த வாரம் கொழும்பிற்குச் சென்ற ஜசிந்தா நீதிமன்ற வழக்கில் கலந்து கொண்டபின்னர் நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறும் போது இதுவே தான் இறுதியாக நீதிமன்ற வழக்கில் கலந்து கொள்வதெனவும் இனிவருங் காலங்களில் தான் நீதிமன்றத்திற்கு வரமாட்டேன் எனக் கூறி கதறியழுதார்.

காணாமலாக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்கள் தொடர்பாக எதுவும் அறிந்திராத நிலையில் மனமுடைந்த நிலையில் இதுவரை ஏழு பேர் இறந்துள்ளதாகவும் இதில் ஜசிந்தா ஏழாவதாக உள்ளதாகவும் பலவந்தமாகக் காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர் சங்கம் தெரிவித்துள்ளது.

காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகளைப் பெற்றுக் கொள்வதற்காக, நாட்டிலுள்ள ஒவ்வொரு மாகாணத்திற்கும் அதிபர் செயலக ஆணைக்குழுக்களை முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க முதன் முதலாக 2004இல் நியமித்திருந்தார்.

இருப்பினும், சந்திரிக்காவால் நியமிக்கப்பட்ட அதிபர் செயலக ஆணைக்குழுக்களால் வழங்கப்பட்ட இறுதி அறிக்கைகள் பிறிதொரு அரசியல் வித்தையாகவே கருதப்பட்டது. ஏனெனில் இந்த ஆணைக்குழுக்களில் அங்கம் வகித்த முதன்மை சட்ட மற்றும் கல்வி சார் வல்லுனர்கள் காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பாக எவ்வித காத்திரமான தீர்வுகளையும் வெளியிடவில்லை.

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவானது ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி மக்ஸ்வெல் பரணகமவின் தலைமையில் ஆகஸ்ட் 2013ல் உருவாக்கப்பட்டு கடத்தப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டது.

இந்த ஆணைக்குழுவானது இரண்டு ஆண்டுகளாக முறைப்பாடுகளைச் செவிமடுத்ததன் பின்னர் ஒக்ரேபார் 2015ல் தனது இறுதி அறிக்கையை வெளியிட்டது. ஆனால் இந்த ஆணைக்குழுவிடம் தமது பிரச்சினைகளைத் தெரிவித்த காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தனர். ஏனெனில் இவர்களில் சிலர் மூன்றாவதாக அல்லது நான்காவது தடவையாக தமது சாட்சியங்களை வழங்கியிருந்தனர்.

இவ்வாறான ஒரு சூழலில் 58 வயதான மன்னாரைச் சேர்ந்த ஜசிந்தா காணாமலாக்கப்பட்ட தனது கணவன் மற்றும் மகன் தொடர்பாக பலமுறை சாட்சியம் வழங்கிய நிலையில் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தார்.

இவர் இறுதியாக நீதிமன்றை விட்டு வெளியேறும் போது இனிமேலும் நீதிமன்றத்திற்கு வரமாட்டேன் எனக் கதறியழுததானது மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழுவில் குறிப்பிடப்பட்டிருந்தது போன்று காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் எவ்வளவு தூரம் மனஅழுத்தத்திற்கு உட்பட்டுள்ளனர் என்பதை உறுதிப்படுத்துகின்றது.

வடக்கு கிழக்கில் உள்நாட்டு யுத்தம் ஆரம்பித்ததன் பின்னர் பலவந்தமான காணாமற் போதல்கள் நாளாந்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்தன. போரின் ஆரம்ப நாட்களில் வடக்கு கிழக்கில் சட்டம் மற்றும் ஒழுங்கு குலைந்திருந்த போது தமிழ் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளால் காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் அதிகமாகக் காணப்பட்டன.

ஆனாலும் சிறிலங்கா பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த போது அல்லது பாதுகாப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட போது பெரும்பாலான யுவதிகள் உட்பட இளைஞர்கள் காணாமலாக்கப்பட்டுள்ளதாக இவர்களது உறவுகளால் அதிபர் செயலக ஆணைக்கழுக்களிடம் வழங்கிய சாட்சியங்கள் உறுதிப்படுத்துகின்றன.

மே 2009ல் உள்நாட்டு யுத்தம் முடிவுற்ற போது சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்த பெரும்பாலான தமிழ் இளையோர்களுக்கு என்ன நடந்தது என்பது இன்னமும் தெரியவில்லை. இவ்வாறு சரணடைந்தவர்கள் பேருந்துகளிலும் ட்ரக் வண்டிகளிலும் சிறிலங்கா இராணுவத்தினரால் ஏற்றிச் செல்லப்பட்டதைத் தாம் நேரில் கண்டதாக இவர்களின் உறவினர்கள் கூறியுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று பேர் தமது வழக்குகளை வவுனியா உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றுமாறும் தமது வழக்குகளை விசாரணை செய்து தம்மை விடுவிக்குமாறு கோரி உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட வேளையிலேயே ஜசிந்தா பீரிசின் இறப்பும் இடம்பெற்றது.

இதேவேளையில் கடந்த வாரம் பிணையில் விடுவிக்கப்பட்ட தனது மூத்த மகனான நாமல் தங்காலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததை நேரில் பார்த்த முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச அழுதிருந்தார். சிறையில் தடுத்து வைக்கப்பட்டி போது மழை நீர் பெருமளவில் தனது சிறைக்கூடத்திற்குள் உட்புகுந்ததாகவும் வண்டுகள் பெருமளவில் காணப்பட்டதாகவும் சட்டவாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் தெரிவித்திருந்தார்.

சில நாட்கள் மட்டுமே சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நாமல் ராஜபக்ச சிறையில் தான் எவ்வளவு கஸ்டங்களை அனுபவித்ததாகக் கூறுகின்றார் எனில் பல ஆண்டுகளாக எந்தவொரு சட்ட நடவடிக்கையும் இன்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் ஏக்கங்கள் எவ்வாறானதாக இருக்கும் என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

இதேபோன்றே மன்னாரைச் சேர்ந்த ஜசிந்தா பீரிசின் இறப்பும், காணாமலாக்கப்பட்ட உறவுகள் தொடர்பாக எந்தவொரு நீதியும் கிடைக்காது மன அழுத்தத்துடன் வாழும் உறவுகளின் வலியை வெளிப்படுத்தி நிற்கின்றது.

வழிமூலம் – Ceylon today

ஆங்கிலத்தில் – Manekshaw

மொழியாக்கம் – நித்தியபாரதி

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: