ஆற்றில் மூழ்கி திருவண்ணாமலையை சேர்ந்த சிறுவன் உட்பட 2 சிறுமிகள் பலியாகினர்!

0
49

ஆற்றில் மூழ்கி திருவண்ணாமலையை சேர்ந்த சிறுவன் உட்பட 2 சிறுமிகள் பலியாகினர்!

மும்பை அந்தேரி மேற்கு சிட்லாதேவி டி.என்.நகர் பகுதியை சேர்ந்த தமிழ் குடும்பத்தினர் சிலர் தீபாவளி விடுமுறையொட்டி நேற்று பால்கர் மாவட்டம் வஜ்ரேஸ்வரிக்கு சுற்றுலா சென்றிருந்தனர். அங்கு பெரியவர்கள் இயற்கை அழகை ரசித்து கொண்டிருந்தனர். அவர்களுடன் சென்றிருந்த சிறுவர், சிறுமிகள் அங்குள்ள ஆற்றில் இறங்கி ஆனந்தமாக குளித்து கொண்டிருந்தனர்.

இந்தநிலையில் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த முருகன் என்பவரது மகள் திவ்யா(வயது9) சகதியில் சிக்கிக்கொண்டாள். அதில், இருந்து அவளால் மீண்டு வெளியே வர முடியவில்லை.

இதனால் அவள் தண்ணீர் மூழ்கினாள். இதை கவனித்த ஞானவேல் என்பவரது மகள் சிவரஞ்சனி (9), இன்னொரு முருகன் என்பவரது மகன் சஞ்சய்(8) ஆகியோர் அவளை காப்பாற்ற முயற்சி செய்தனர். இதில் துரதிருஷ்டவசமாக அவர்களும் சகதியில் சிக்கி தண்ணீருக்குள் மூழ்கினார்கள்.

இந்தநிலையில், சிறுவன், சிறுமிகளை காணாமல் அவர்களது பெற்றோர் தேடினர். ஆற்றுக்குள் இறங்கி தேடிய போது 3 பேரும் சகதிக்குள் சிக்கி இருந்ததை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.

உடனடியாக 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதித்து விட்டு 3 பேரும் இறந்து விட்டதாக கூறினர். தங்கள் மகன் மற்றும் மகள்களின் உடல்களை பார்த்து அவர்களது பெற்றோர் கதறி அழுதனர்.

தகவல் அறிந்து வந்த அப்பகுதி போலீசார் பலியான 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மும்பை கூப்பர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பலியான சிறுவன், சிறுமிகள் 3 பேரின் சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நல்லூர் ஆகும். சிறுவன், சிறுமிகள் ஆற்றில் மூழ்கி பலியான இந்த சம்பவம் டி.என்.நகரில் வசிக்கும் தமிழர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: